பத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி

சமூக ஊடகம்

‘’ 10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் செய்தி மற்றும் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
10 வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை குடும்பத்து மாணவி ரோகினி சாதனை. சினிமா நடிகைகளுக்கு லைக் ,ஷேர் வரும் .இந்த சகோதரிக்கு ஒரு ஷேர் வருமா ?அப்பிடியே என்னோட Page ah லைக் பண்ணி Support பண்ணுங்க friends !!
Govt school student Rohini scores 97% in 10th board exam

Archived Link

ஏப்ரல் 29ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும் 14,000 பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தின் உண்மைத்தன்மை அறிவதற்காக, அதனை Yandex இணையதளத்தில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்றும், இதனை பலரும் பயன்படுத்தி, தங்கள் விருப்பம்போல, காமா, சோமா கதைகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் என்றும் தகவல் கிடைத்தது.

சரி, ஒருவேளை, மேற்கண்ட பதிவில், புகைப்படம் மாறியிருக்கலாம், உண்மையில், யாரேனும் ரோகிணி எனும் மாணவி, அவ்வளவு மதிப்பெண், 10ம் வகுப்பு தேர்வில் எடுத்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் மீண்டும் கூகுளில் தேடினோம்.

ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. மாறாக, இதே புகைப்படம் மற்றும் கமெண்டை வைத்து, தமிழச்சிடா என்ற ஃபேஸ்புக் குழு வெளியிட்ட பதிவுதான் கிடைத்தது.

Archived Link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கு வந்த நாள் முதலாக, இத்தகைய வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. ஏதேனும் ஒரு சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’நான் ஒரு அனாதை, அப்பா, அம்மா இல்லை. ஏழைப்பெண், எனக்கு லைக் வருமா,’’ எனப் பகிர்கிறார்கள். மேலும், ஏதேனும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’நான் தனிமையில் வாடுகிறேன், லைக், கமெண்ட் செய்தால் என் ஃபோன் நம்பர் தருவேன்,’’ என்றும், ‘’நான் விதவை, எனக்கு யாரும் இல்லை, என்னை பிடித்திருந்தால், லைக் பண்ணி கமெண்ட் செய்யுங்க, ஃபோன் நம்பர் தரேன், நாம ஜல்சா பண்ணலாம்,’’ என்றும், ‘’இங்கே ஹாய் என கமெண்ட் செய்தால் மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் நிர்வாணப் படம் உங்களுக்கு கிடைக்கும்‘’ என்றும் பல விதமான ஆபாச கமெண்ட்களை பகிர்வது சிலரின் வழக்கமாக உள்ளது.

சமூக ஊடகங்களின் பயனாளர்கள் பலரும் சமூக அக்கறை என்பதை கடந்து, தங்களது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ளவே, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் வருகிறார்கள். அவர்களை குறிவைத்துத்தான் இத்தகைய போலி பதிவுகளை சிலர் பகிர்ந்து வருகின்றனர். இதன் உண்மைத்தன்மை புரியாமல் பலர் ஃபோன் நம்பர் கொடுத்து, சாட்டிங், டேட்டிங் வரை சென்று, பணத்தை இழந்து பரிதவிப்பதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் பாலியல் இச்சை நோக்கில் எதையும் பார்க்காமல், கொஞ்சமேனும் மூளையை பயன்படுத்தி, செயல்பட்டால், இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் தப்பிக்கலாம்.

லைக், கமெண்ட் வாங்குவதற்காக, சிலர் இப்படியான மோசடிகளை செய்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல, சிலர் உங்களின் ஃபோன் நம்பரை வாங்கி, அதை வைத்து ஏதேனும் ஆன்லைன் மோசடி செய்வார்கள் என்பதும் இருமடங்கு உண்மை. எனவே, நமது வாசகர்கள் கவனத்துடன் சமூக ஊடகங்களில் இத்தகைய பதிவுகளை பார்த்தால், புறக்கணிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:பத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி

Fact Check By: Parthiban S 

Result: False

2 thoughts on “பத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி

Comments are closed.