
கர்நாடகாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த நடந்த பேரணியின் வீடியோ என்று தேசிய கீதம் பாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
1.26 நிமிடங்கள் ஓடும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், தேசிய கீதம் பாடுகிறார்கள். எந்த இடத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி, பேரணி, பொதுக்கூட்டம் என்று இல்லை. ஒரே ஒரு இடத்தில் சஹாரா இந்தியா நிறுவனத்தின் லோகோ போல ஒன்று வருகிறது. வீடியோவின் 1.11வது நிமிடம் சஹாரா இந்தியா நிறுவனத்தின் தலைவர் போல ஒருவர் தெரிகிறார். ஆனால் அது தெளிவாக இல்லை.
நிலைத் தகவலில், “கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடந்த பேரணி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை, Virugai Gunaseelan Bjp என்பவர் 2020 ஜனவரி 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி என்று எந்த அறிவிப்பும் இல்லை. ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி தேசிய கீதம் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி போல உள்ளது. தேசிய கீதம் பாடும் அனைவரும் டை கட்டிக்கொண்டு கார்ப்பரேட் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் போல உள்ளனர். சஹாரா இந்தியா நிறுவனத்தின் லோகோ வேறு உள்ளது. சஹாரா இந்தியா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் போல ஒருவர் உள்ளார். இவை எல்லாம் இந்த வீடியோ மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.
இந்த வீடியோவை, InVid என்ற இணையதளத்தில் பதிவேற்றி படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஈடுபட்டோம். அப்போது 5 லட்சம் பேர் ஒன்று சேர்ந்து தேசிய கீதம் பாடினார்கள் என்று ஒரு வீடியோ 2018 ஜனவரி 11ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. ஆனால், எங்கே, யார் இதை செய்தது என்று குறிப்பிடவில்லை. இந்த வீடியோவும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒன்றாக இருப்பது தெரிந்தது.
Archived Link | Search Link |
5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடினார்கள் என்ற கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, குஜராத்தில் 3.5 லட்சம் பேர் ஒன்று சேர்ந்து தேசிய கீதம் இசைத்ததாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அது தொடர்பான வீடியோ கிடைக்கவில்லை. 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் இசைத்தார்கள் என்ற கீ வார்த்தையை பயன்படுத்தி யூடியூபில் தேடினோம். அப்போது, 1,21,653 பேர் இணைந்து தேசிய கீதம் பாடியதாக ஒரு வீடியோ கிடைத்தது.

Search Link |
அந்த வீடியோவின் முகப்பு படமும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சியும் ஒன்றாக இருப்பது போல தெரிந்தது. அதை கிளிக் செய்து பார்த்தபோது, இரண்டு வீடியோவும் ஒன்றுதான் என்பது உறுதியானது. அந்த வீடியோவில், சஹாரா இந்தியா பரிவார் நிறுவனம் சார்பில் அதன் ஊழியர்கள் 1.21 லட்சம் பேர் இணைந்து தேசிய கீதம் பாடினார்கள் என்று இருந்தது.
Archived Link |
எப்போது இந்த நிகழ்வு நடந்தது என்று கூகுளில் தேடினோம். அப்போது, 2013ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சஹாரா இந்தியா பரிவார் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய தேசிய கீதம் பாடும் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று செய்திகள் கிடைத்தன. இதில் ஒரு லட்சத்து 1000 பேர் லக்னோவிலும், இந்தியா முழுவதும் உள்ள சஹாரா அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் சேர்த்து மொத்தம் 11 லட்சம் பேர் இதில் பங்கேற்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

TOI Link | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
இந்த வீடியோ 213ம் ஆண்டு லக்னோவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தை பாடும் உலக சாதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சஹாரா இந்தியா நிறுவனம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியா தவறான முறையில் பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நடந்த பேரணி இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
