உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம்

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Archived link

உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட இடத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர். சுவரின் இரு பக்கமும் இந்தியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் வீடியோ எடுக்கின்றனர்.

பார்க்க, வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரி முன்னிலையில் எடுத்துச் செல்வது போல் உள்ளது. ஆனால், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடையொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக Breaking News – தமிழில் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ, 2019 மே 21ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்க்கும்போது, தேர்தல் அதிகாரி முன்னிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது போல் உள்ளது. இரும்பு ஷட்டருக்கு முன் நிறைய படுக்கைகளைக் காண முடிகிறது. பாதுகாவலர்கள் அங்கே தங்கி பாதுகாத்தது போல் தெரிகிறது. ஆனால், கடை ஒன்றில் இருந்து இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதில் கூறப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

வீடியோவில் ஷட்டரின் இரண்டு பக்கமும் இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. அதை படமாக எடுத்து இந்தி தெரிந்தவர்களிடம் அளித்து அதில் என்ன உள்ளது என்று கேட்டோம். அது தேர்தல் ஆணையத்தின் “ஸ்ட்ராங் ரூம்” என்று எழுதப்பட்டுள்ளதாக கூறினர்.

EVM 2.png

இந்த வீடியோவின் ஒரு காட்சியை மட்டும் புகைப்படமாக எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதன் நடுவே, boomlive.in-ல் ஒரு செய்தி நமக்கு கிடைத்தது.

அதில், இந்த வாக்குப் பதிவு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் ஸ்ட்ராங் ரூம் என்று நிரூபிக்கப்பட்டு இருந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலி என்ற இடத்தில் ஒரு கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி நவநீத் சிங் சஹாலை தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். வதந்தியை மறுத்த அவர், “வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக தேர்தல் ஆணைய பாதுகாப்பு அறையில் உள்ளன. குறிப்பிட்ட அந்த வாக்குபெட்டி பாதுகாப்பு மையத்தில், வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படாத கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு வேட்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சிகளின் ஆதராளர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்படாத கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது” என்றார். பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையையும் அந்த செய்தியில் வெளியிட்டிருந்தனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி நிர்வாகி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்திருந்ததையும் அது பகிர்ந்திருந்தது. இந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மே 21ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்கள், ஸ்டிராங்ரூமுக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகளை வெளியிட்டு, தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்,

வீடியோவில் உள்ளது கடை இல்லை. தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பில் உள்ள ஸ்டிராங் ரூம்.

அங்கு வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, மாற்றப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவுக்கு பயன்படாத கூடுதல் இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடு திருப்திஅளிப்பதாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகி எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்துள்ளார்.

முறைகேடு ஏதும் நடைபெறவில்லை… வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடையில் கிடைத்துள்ளது என்ற வீடியோ பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு முறைகேடு நடந்தது உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டபோது, பல செய்தி இணைய தளங்கள் இதேபோன்று செய்தியை வெளியிட்டது தெரிந்தது.

கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்த செய்தியில், “நாட்டின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.,வினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

Archived link 1

Archived link 2

சந்தாலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படும் வீடியோவை இந்த செய்திக்கு ஆதாரமாக அளித்திருந்தனர். அந்த வீடியோ ஏற்கனவே தவறானது என்று நம்முடைய கண்டறிதலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் செய்திகளில், கடையில் இறக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்தாலே அது ஸ்ட்ராங் ரூம் என்று நன்கு தெரிகிறது. ஊடகத்தில் உள்ளவர்களுக்கு அது எப்படி தெரியாமல் போனது என்றுதான் புரியவில்லை. அவதூறு செய்தியை வெளியிடும் நோக்கில் அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது போல் உள்ளது.

EVM 3.png

அதேபோல், பஞ்சாபில் நடந்த நிகழ்வு என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் உள்ள கல்வி நிறுவனத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படுவது போல் இருந்தது. அதில் கூட பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்படுகிறது என்றுதான் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வீடியோவில் அந்த இடம் ஒரு பள்ளிக்கூடம் என்பதை நிரூபிக்கும் காட்சி இருந்தது. 0.07வது நிமிடத்தில் எஸ்.டி.வித்யாமந்திர் என்று பள்ளியின் பெயர் வருவதைக் காணலாம்.

EVM 4.png

இதில் ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டிருந்த மற்றொரு வீடியோவில், “கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், வேட்பாளருக்கு இது தொடர்பாக ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோக்களில் எந்த இடத்திலும் பா.ஜ.க-வினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியதாக கூறவில்லை. அதேபோல் செய்தியிலும் முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால், தலைப்பில் மட்டும் பா.ஜ.க-வை குற்றம்சாட்டியுள்ளனர்.

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த செய்தி முழுக்க தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.

இதேபோல், ஒன் இந்தியாவில், “கடத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்… பின்னணியில் பா.ஜ.க… வெளியான பரபரப்பு வீடியோ” என்று செய்தி வெளியாகி உள்ளது.

Archived link 1

Archived link 2

செய்தியில் 99 சதவிகிதம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்ற வகையிலேயே செய்தி உள்ளது. கடைசி ஒரே ஒரு வரியில், இதைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.

EVM 5.png

தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்று குறிப்பிட்டவர்கள் அது தொடர்பாக வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த பிறகும் கூட, தலைப்பிலோ, செய்தியிலோ மாற்றம் இல்லை. பா.ஜ.க-வினர் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்று பகிரங்கமாக கூறியிருப்பது நெருடலாகவே உள்ளது.

ஒன் இந்தியாவின் செய்தியில், நாம் தவறானது என்று தற்போது நிரூபித்துள்ள வீடியோக்களை மட்டுமே  ஆதாரமாக காட்டியுள்ளனர். இதன் மூலம் இந்த செய்தி 99 சதவிகிதம் பொய்யும், தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்ற ஒரே ஒரு வரி உண்மையும் கலந்து வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

Fact Check By: Praveen Kumar 

Result: False