ஆபாச படம் பார்ப்பவர்களின் பெயர் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Raja Sekara Pandian‎ எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
உலக அளவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பதில் சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதன்பேரில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு, இந்திய அரசுக்கு தகவல் தர, அங்கிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதன்பேரில், குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள், அதுபற்றிய இணையதளம் நடத்துவோரின் பட்டியலை தயாரிக்கும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

Vikatan News Link Thanthi TV News Link 

உண்மை இப்படியிருக்க, வயது வந்தவர்களுக்கான தொழில்முறை ஆபாச படங்களை பார்த்தாலே போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் பலர் தகவல் பகிர தொடங்கியுள்ளனர். இதற்கேற்ப, செய்தி ஊடகங்களும் அரைகுறையான தலைப்புகளுடன் செய்திகளை பகிர, பொதுமக்கள் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஆபாச படம் பார்த்தவரின் விவரத்தை சிபிஐ வெளியிட்டது என்று கூறியுள்ளனர். சிபிஐக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை எனும் நிலையில், இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்ய தொடங்கியதுதான் ஆச்சரியமாக உள்ளது. இதில் இருப்பது உண்மையான சிபிஐ வெளியிட்ட பட்டியல் கிடையாது, சிபிஐ என்ற வார்த்தை கூட எழுத்துப் பிழையுடன் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘Department of Central Bureau of Investication’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ பெயர் இப்படி எங்கேயும் எழுதப்படாது.

இதுதவிர இந்த பெயர் பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் காலேஜ் மாணவர்களாக உள்ளனர். வேறு எதோ பெயர்ப்பட்டியலை எடுத்து, இப்படி தவறான தகவலை சித்தரித்து பகிர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

அதிகாரப்பூர்வமாக, சிபிஐ லோகோவில் Central Bureau of Investigation – India என்ற வார்த்தையே அதிகம் காண முடிகிறது. 

சிபிஐ இப்படி பெயர்ப் பட்டியல் வெளியிட்டதாக நமக்கு எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் கிடைக்கப் பெறவில்லை. யாரோ விஷமிகள் சிபிஐ பெயரை பயன்படுத்தி வேடிக்கையாக தகவல் பகிர, அதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்து மற்றவர்களையும் குழப்பி வருகின்றனர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிடுவோர் மற்றும் அதுபற்றிய இணையதளம் நடத்துவோர் போன்றோர் பற்றியே சென்னை/தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக, ஏற்கனவே காவல்துறை தரப்பில் ஊடகங்களில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிபிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூட இப்படி எந்த செய்தி அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அது மட்டுமின்றி, ஆன்லைனில் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பிரத்யேக குழு ஒன்றையும் சிபிஐ கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:ஆபாச படம் பார்ப்பவர்களின் பெயர் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False