நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?

அரசியல் இந்தியா

நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, “நான் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டேன். அதனால் கவலையில்லை” என்று கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Article LinkArchived Link 2

நாங்ககெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்… டோன்ட் ஒர்ரி… நிர்மலாவின் பொளேர் பேச்சு ஒன்று ஒன் இந்தியா தமிழின் செய்தி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. டிசம்பர் 5, 2019 அன்று வெளியிடப்பட்ட இந்த செய்தியை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்கள் வெங்காயத்தை வாங்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காயம் விலை ஏற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்ததாகவும், அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம். அதனால கவலையில்லை” என்று கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. 

தலைப்பில் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக குறிப்பிட்டவர்கள், செய்தியின் உள்ளே, அவ்வளவாக சாப்பிடுவது இல்லை என்ற கூறினார் என்று மாற்றி குறிப்பிட்டுள்ளனர். மேலும்,

25 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும் அதில் இடம் பெற்றிருந்தது. அதில், உறுப்பினர் ஒருவர் இந்தியில் கேட்கிறார். அதற்கு, அமைச்சர் இந்தியிலேயே பதில் அளித்தார். 

உண்மையில் என்ன நடந்தது, இந்தி உரையாடலில் என்ன பேசினார்கள், வெங்காய விலை உயர்வால் கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் சொன்னாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

ஒன் இந்தியா வீடியோவில், நிர்மலா சீதாராமன் என்ன பேசினார் என்று மொழியாக்கம் செய்து கேட்டோம். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர், “நீங்கள் எகிப்து வெங்காயத்தை சாப்பிடுவீர்களா?” என்று கேட்கிறார்.

அதற்கு நிர்மலா, “நான் அதிகம் வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை. எனவே கவலைப்பட வேண்டாம். வெங்காயம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று கருதும் குடும்பத்திலிருந்து வந்தவள்” என்கிறார்.

உடனே நாடாளுமன்ற உறுப்பினர், “வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா” என்று கேட்கிறார்.

அதற்கு நிர்மலா சீதாராமன், “இல்லை. மாண்புமிகு உறுப்பினர் சுப்ரியா அவர்களே” என்று தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். 

இதில் எந்த இடத்திலும், வெங்காயம் சாப்பிடுவது இல்லை… அதனால் வெங்காய விலை உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறவில்லை.

முழு வீடியோ கிடைக்குமா என்று தேடினோம். நாடாளுமன்ற மக்களவை வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில் கடைசியில் சுப்ரியா சுலே பேசுகிறார். 8 மணி அளவில் அவர் பேசும் காட்சிகள் வருகின்றன. அப்போது, “இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், மிகப் பெரிய அளவில் அரிசி, கோதுமை ஏற்றுமதி செய்யும் நாம், வெங்காயத்தை ஏன் இறக்குமதி செய்கிறோம். எகிப்து வெங்காயத்தை சாப்பிட நான் விரும்பவில்லை. இதற்கு அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்” என்கிறார். அதற்குப் பிறகுதான் மேற்கண்ட செய்தியில் இடம் பெற்ற வீடியோ நிகழ்வு வருகிறது.

வேறு ஏதாவது செய்தி உள்ளதா என்ற தேடினோம். அப்போது, நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். 4.53 நிமிடம் அந்த வீடியோ ஓடுகிறது. அந்த பதிவில், “வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்ததின் முழு வீடியோ. இதில் ஒரு சிறு பகுதியை மட்டும் கத்தரித்து தவறான அர்த்தம் வரும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

இதன் மூலம், வெங்காயம் சாப்பிடுவது இல்லை என்ற தலைப்பு தவறானது என்றும், வெங்காயம் குறைவாக சாப்பிடுவேன் என்று குறிப்பிட்டது உண்மை என்றும், வெங்காய விலை உயர்வு பற்றி கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான செய்தி தவறானது என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

1 thought on “நாங்க எல்லாம் வெங்காயம் சாப்பிடவே மாட்டோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினாரா?

Comments are closed.