
‘’சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாஸ்க் அணியாமல் மருத்துவமனை சென்றார்- அவருக்கு மட்டும் கொரோனா வைரஸ் ஏற்படாதது ஏன்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சீனா வைரஸ் – இவன் மட்டும் பாதுகாப்புக் கவசம் எதுவும் போடாமல் மருத்துவமனைக்குள் எப்படிப் போகிறான்? சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா வரை பரவும் கரோனா வைரஸ் ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா, வடகொரியாவுக்கு பரவவில்லை?,’’ என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது உண்மை எனத் தெரியாமல் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா அல்லது எப்போது எடுக்கப்பட்டது என்று சந்தேகத்தில் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது 2018ம் ஆண்டில் எடுத்த புகைப்படம் என தெரியவந்தது.

இதன்படி, சீனாவில் Wuhan – Hubei province பகுதியில் உள்ள Wuhan Xinxin Semiconductor Manufacturing மையத்தை சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேரில் பார்வையிட்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம்தான் இது. இதற்கும், தற்போதைய கொரோனா வைரஸ் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
Scmp.com Link | Archived Link |
இதேபோல, ரஷ்யா, வடகொரியா போன்ற கம்யூனிச சித்தாந்த நாடுகளில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற தகவலும் தவறாகும். அந்த நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
ரஷ்யாவில் இதுவரை 1000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய ரஷ்ய அரசின் லைவ் புல்லட்டின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
மேலும், வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மற்றபடி, வூகான் நகரில் பரவிய கொரானா வைரஸ், பீஜிங் நகருக்கு பரவாதது ஏன் என்ற கேள்வியும் தவறாகும். பீஜிங் நகரிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இறுதியாக, அமெரிக்காவை மறைமுகமாக, பொருளாதார அளவில் வீழ்த்த சீனா ஏவிய Bio war இது என்று தகவலிலும் முழு உண்மை இல்லை. கொரோனா வைரஸ் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி வித விதமான தகவல்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த சீனாவின் Bio war திட்டம் என்ற தகவலும்.
வெளவால் போன்ற பறவைகள், பன்றி போன்ற கால்நடைகள் மற்றும் கடல் உணவுகளை அதிகளவில் சீன மக்கள் சாப்பிடுவது வழக்கம். இவற்றில் பல இறைச்சி வகைகள் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடக்கூடியவையாகும். அவற்றில் இருந்து ஒருவேளை கொரோனா தொற்று மக்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்பதுதான் இப்போதைக்கு உலக அறிவியலாளர்கள், மருத்துவர்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய விசயமாக உள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது பற்றி விரிவான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் முடிவாக நமக்கு விரைவில் உண்மை விவரம் தெரியவரலாம். அதுவரையிலும், இதுபோன்ற கட்டுக்கதைகளை உண்மை என யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் பற்றிய தகவல் தவறு என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாஸ்க் அணியாமல் மருத்துவமனை சென்றாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
