உமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா?

அரசியல் சமூக ஊடகம்

சுய மரியாதையோடு வாழக் கற்றுத்தந்தது திராவிடம், என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நிற்கும் ஸ்டூலை, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மேடையில் அமர்ந்து பிடிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

திராவிடம் என்ன செய்தது ??கேட்க்கும் முட்டாள் கூட்டமே இது போன்ற இழி பிறவிகளிடமிருந்து நம்மை காத்து சுயமரியாதையோடு வாழவைத்தது திராவிடம்

Archived link

இதில் உள்ள புகைப்படத்தில், மேடை மீது ஸ்டூல் ஒன்றில் ஏறி நின்றபடி உமாபாரதி பேசுகிறார். அவர் நிற்கும் ஸ்டூலை ஒருவர் பிடித்தபடி அமர்ந்துள்ளார். உமா பாரதியின் மீது 5வது ஃபெயில் என்றும் அமர்ந்திருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன், “திராவிடம் என்ன செய்தது என்று கேட்கும் முட்டாள் கூட்டமே, இதுபோன்ற இழிபிறவிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றி சுய மரியாதையோடு வாழ வைத்தது” என்று பதிவிட்டுள்ளனர்.

ஜெகன்னாத் ஜெஜெ என்பவர் மே 2ம் தேதி இதை பதிவிட்டுள்ளார். 5ம் வகுப்பு ஃபெயிலான உமாபாரதி நிற்கும் ஸ்டூலை ஐ.ஏ.எஸ் படித்த அதிகாரி பிடிக்கும் நிலை உள்ளது போன்று பதிவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதாலும் பா.ஜ.க எதிர்ப்பு நிலை காரணமாகவும் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேடையில் உமாபாரதி நிற்கும் இந்த படம் பற்றி செய்தி ஏதேனும் உள்ளதா என்று கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பரவி வருவது தெரிந்தது. மேலும், இது தொடர்பான செய்திகளும் கிடைத்தன.

இந்த படம் தொடர்பாக ஜாக்ரான் என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி, ஜான்சி நகரில் நடந்த பா.ஜ.க இளைஞர் அணி கூட்டத்தில் மத்திய அமைச்சர் உமா பாரதி பங்கேற்றார். அப்போது மேடையின் போடியம் உயரமாக இருந்ததால் உமா பாரதியால் பேச முடியவில்லை. அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சிறிய ஸ்டூலை கொண்டுவந்து போட்டு, உமாபாரதியை பேச செய்துள்ளார். அவர் பேசி முடிக்கும் வரை ஸ்டூல் விழாமல் பிடித்துக்கொண்டார். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் உமாபாரதி பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இது தொடர்பாக வேறு ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் இணையதள பக்கத்தில் டிசம்பர் 12ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ஸ்டூல் ஏறி ராகுல், மம்தாவை திட்டிய உமாபாரதி என்று தான் இருந்தது. அந்த செய்தியிலும் யார் என்று அடையாளம் காண முடியாத அதிகாரி ஒருவர் அமைச்சரின் ஸ்டூலை பிடித்தபடி இருந்தது அசௌகரியமாக இருந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

உண்மையில் அந்த படத்தைப் பார்த்தாலே அது பா.ஜ.க நிகழ்ச்சி என்பது தெரிகிறது. போடியத்தில் பா.ஜ.க கொடி இருப்பதைக் காணலாம்.  உமா பாரதி மத்திய அமைச்சராகவே இருந்தாலும் கூட ஒரு கட்சி நிகழ்ச்சிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கேற்பது இல்லை.

அப்படியே அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்திருந்தால், அவரைப் பற்றி செய்தி ஏதாவது வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், அது பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை. நமக்கு கிடைத்த செய்திகளில், அவர் பாதுகாப்பு அதிகாரி என்றே கூறப்பட்டுள்ளது.

உமாபாரதி கல்வித் தகுதி குறைவுதான். இந்த பதிவில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர் 6வது வரை படித்துள்ளதாக பல செய்திகள் கூறுகின்றன. படிக்கும் காலத்திலேயே இந்து மதம் பற்றியும் பகவத்கீதை பற்றியும் மிக ஆழமான சொற்பொழிவுகள் நிகழ்த்த தொடங்கிவிட்டாராம் உமா பாரதி. இதனால், கடவுளின் குழந்தை என்று கொண்டாடப்பட்டுள்ளார். அதன்பின், ஆன்மிக காரியங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்று விக்கிப்பீடியாவில் கூறப்பட்டுள்ளது. மேலும், elections.in என்ற இணைய பக்கத்திலும் அவர் 6ம் வகுப்பு வரை படித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த படம் உண்மையானதுதான். ஆனால், உமா பாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப் பிடித்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லை. உமா பாரதி 5ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவரும் இல்லை. இதன் மூலம், இந்த தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:உமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா?

Fact Check By: Praveen Kumar 

Result: False