
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டரில் ஏறச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கப்பட்ட இடத்தில் திரண்டிருந்தவர்கள் சௌகிதார் சோர் ஹே அதாவது காவல்காரன் ஒரு திருடன் என்று கோஷங்கள் எழுப்பியது போன்று உள்ளது.
நிலைத் தகவலில், “பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் காலடி எடுத்து வைத்த உடனே #சவுக்கிதார்_சோர்_ஹை (காவல்காரன் திருடன்) என்ற கோஷம் விண்ணை பிளந்தது ..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை NO CAA என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 22ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மோடியை எதிர்த்து செளகிதார் சோர் ஹே என்ற கோஷம் எழுப்பப்பட்டதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், மம்தா பானர்ஜியை கோபப்படுத்தும் வகையில் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பப்பட்டதாக மற்றொரு தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். இதில் எது உண்மையானது என்று கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சௌகிதார் சோர் ஹே என்று கோஷம் எழுப்பப்பட்டதாக ஒரு தரப்பினரும், மோடி முன்னிலையில் தைரியமாக ஜெய்ஶ்ரீராம் என்று முழங்கிய மக்கள் என்று மற்றொரு தரப்பினரும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இவற்றுக்கு இடையே பெங்கால் டைம்ஸ் என்ற வங்க மொழி செய்தி ஊடகம் வெளியிட்ட வீடியோ ஒன்றும் கொல்கத்தா வானொலி நிலையம் வெளியிட்ட வீடியோவும் நமக்கு கிடைத்தன. பெங்கால் டைம்ஸ் வீடியோவில் மோடி, மம்தா பானர்ஜி கட்டிடத்தை விட்டு வெளியே வரும் முழு காட்சியும் இருந்தது. அதில் ஜெய்ஶ்ரீராம் என்று சிலர் குரல் எழுப்புகின்றனர். மேலும் சங்கு சத்தமும் கேட்கிறது. இது தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.
கொல்கத்தா வானொலி நிலையம் வெளியிட்ட வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒன்றாக இருந்தது. ஆனால், ஆடியோ மட்டும் எடிட் செய்யப்பட்டு இருந்தது. கொல்கத்தா வானொலி நிலையம் வெளியிட்ட வீடியோவில் ஜெய்ஶ்ரீராம் என்று குரல் எழுப்புவது தெரிந்தது. ஆனால், குரல் எழுப்பியவர்கள் ஹெலிபேடுக்கு வெகு தூரத்தில் இருந்தது தெரிகிறது. சௌகிதார் சோர் ஹே என்று யாரும் குரல் எழுப்பவில்லை என்பதும் உறுதியானது.
அரசு நிறுவனமான வானொலி நிலையம் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்துள்ளது. அதில், சௌகிதார் சோர் ஹே என்று கோஷம் எழுப்பப்படவில்லை என்பது உறுதியாகிறது.
இதன் அடிப்படையில், மேற்கு வங்கம் ஆம்பன் புயல் பாதிப்பை பார்வையிடச் சென்ற மோடியை எதிர்த்து சௌகிதார் சோர் ஹே என்று கோஷம் எழுப்பப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
