அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சங்கிலியால் கட்டி தூக்கப்படும் சிவலிங்கம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அஸ்திவாரம் தோண்டறப்பொ கிடைச்ச சிவலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Chandra Sekkar என்பவர் 2020 மே 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலத்தைத் தோண்டியபோது தூண்கள், சிவலிங்கம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகியது. இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் கிடைத்த சிவ லிங்கம் என்று படத்தை பகிர்ந்து வருகின்றனர். 

இந்த படம் உண்மையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். சமீபத்தில் நிலத்தை தோண்டும்போது கிடைத்த தூண்கள், சிவலிங்கம் போன்றவற்றின் படங்களை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அதில், இந்த படம் இல்லை.

zeenews.india.comArchived Link

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை 2016ம் ஆண்டு இந்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதை பார்த்தோம். உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போது கிடைத்த சிவ லிங்கம் என்று வதந்தி பரவி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இது குறித்து கோவில் பூசாரி கூறுகையில், “இந்த கோவில் 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கோவிலில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளவில்லை. கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது சிவலிங்கத்தைத் தோண்டியபோது, மேலே உள்ளதைப் போன்று கீழேயும் மிக ஆழத்துக்கு தூண் போல சிவலிங்கம் இருந்தது. கோவிலில் அகழாய்வு செய்தபோது சிவலிங்கம் கிடைத்ததாக பரவும் தகவல் வெறும் வதந்தி” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

amarujala.comArchived Link

இதன் மூலம், இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு வெளியாகி இருப்பதும், பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள கோவிலில் இந்த லிங்கம் இருப்பதும் உறுதியாகி உள்ளது.

இதன் அடிப்படையில், அயோத்தியில் லிங்கம் கிடைத்தது என்ற உண்மைச் செய்தியுடன் தவறான புகைப்படத்தை இணைத்து தகவல் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •