“கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம்?” – ஃபேஸ்புக்கில் பரவும் புதிய தகவல்!

சமூக ஊடகம் | Social சமூகம்

கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Vinayakar 2.png
Facebook LinkArchived Link

விநாயகர் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் வடிவிலான ஓடு கண்டுபிடிப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஆகமம் ஜானகிராமன் என்பவர் 2019 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கீழடியில் 2015ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி தொடங்கியது. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. இங்கு கிடைத்த பொருட்களின் தொடர்ச்சியாக இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடந்தன. 3வது கட்ட பணி தொடங்கிய நேரத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். இட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இது வழக்கமான ஒன்றுதான் அகழ்வாரய்ச்சிக்கு எந்த பதிப்பும் வராது என்று மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். புதிதாக வந்த ஶ்ரீராமன், “2வது கட்ட அகழ்வாய்வின்போது கிடத்த பொருட்களின் தொடர்ச்சி 3ம் கட்ட ஆய்வில் கிடைக்கவில்லை என்பதால் அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளது” என்று 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். 

MinnambalamArchived Link
Daily ThanthiArchived Link

தமிழர்களின் தொன்மையை மறைக்க முயற்சி நடப்பதாக கருதி இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத்தை மீண்டும் நியமிக்க வேண்டும், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆய்வு முடிவுகளை அமர்நாத்தே தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடந்த 4வது கட்ட ஆய்வு முடிவுகளை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதில், “சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளை விட மேலும் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது” என கூறப்பட்டு இருந்தது.

Tamil Indian ExpressArchived Link 1
News 18 TamilArchived Link 2
VikatanArchived Link 3

இந்த ஆய்வில், பானைகள், அணிகலன்கள், எலும்புகள் கிடைத்ததாக கூறப்பட்டது. மதம் தொடர்பாக எந்த ஒரு சின்னமும் கிடைத்ததாக எந்த ஒரு குறிப்பும் அதில் இல்லை.

இந்த நிலையில், விநாயகர் உருவம் பதித்த நாணயம் கிடைத்ததாக சமூக ஊடகங்களில் படம் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த நாணயம் பற்றிய உண்மை நமக்கு கிடைத்தது.

Vinayakar 3.png

இந்த நாணயம் கீழடியில் கண்டெடுக்கப்பட்டது இல்லை. இந்த நாணயத்தை மும்பையில் உள்ள சோர் பஜார் என்ற இடத்தில் மருத்துவர் பிரகாஷ் கோத்தாரி என்பவர் வாங்கியுள்ளார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவரும் கூட. இந்த நாணயம் கிடைத்தது பற்றி அவர் கூறுகையில், “மண் பாண்ட ஓடுகளில் செய்யப்படும் முத்திரைகளை சேகரிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு, சோர் பஜார் பகுதியில் எனக்குத் தேவையான பொருட்கள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சிவப்பு-பிரவுன் நிற டெரகோட்டா முத்திரை ஒன்று கிடைத்தது. அதில் இரண்டு கை விநாயகர் உருவம்போல இருந்தது. பின்பக்கத்தில் பாமினி எழுத்து இருந்தது.

இதை கர்நாடகா பல்கலைக் கழகத்தின் பண்டைய வரலாற்றுத் துறை பேராசிரியர் ஶ்ரீனிவாஸ் ரிட்டியிடம் கொடுத்து எவ்வளவு பழமையானது என்று கேட்டேன். அவர் கி.பி 4-5ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றார். மைசூருவில் உள்ள ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவின் எப்பிகிராஃபி இயக்குநர் ரவிசங்கரிடம் காண்பித்துக் கேட்டபோது, 2ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றார். சிலர் இது 1ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்கின்றனர். 

என்னிடம் 250க்கும் மேற்பட்ட வித்தியாசமான விநாயகர் சிலைகள் உள்ளன. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வளவு பழமையான நாணயம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த உலகின் மிகப் பழமையான விநாயகர் உருவம் என்னிடம் இருக்கிறது என்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்தான்” என்கிறார்.

Deccan Chronicle Archived Link 1
The WeekArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

இந்த விநாயகர் சிலை மும்பையில் கிடைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பானை நாணயம் கி.பி ஒன்று முதல் 5ம்  நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று பலரும் பலவித கருத்தைக் கூறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட கீழடி அகழாய்வில் மதம் தொடர்பாக எந்த ஒரு சின்னமும் கிடைத்ததாக குறிப்பு இல்லை.

இதன் அடிப்படையில் கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம் என்று பரப்பப்படும் ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம்?” – ஃபேஸ்புக்கில் பரவும் புதிய தகவல்!

Fact Check By: Chendur Pandian 

Result: False