எந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி

அரசியல் சமூக வலைதளம்

‘’இந்தியாவிற்குள் இருக்கும் எந்த தமிழனுமே உண்மையான இந்தியன் கிடையாது,’’ என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 

Royapuram Khadhar Chennaifacebook DMK என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இந்த ஆளை என்ன பன்னலாம்!!! முடிஞ்சவரை ஷேர் பன்னுங்க!!,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். சில நாள் முன்பாக, தந்தி டிவி நேரலையில் பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றியும், அவரது மகன் ராகுல் காந்தி பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது, இத்தாலியில் பிறந்தவர்கள் இந்தியாவை ஆள நினைக்கக்கூடாது, இந்தியன் என்ற உணர்வுள்ளவன், இந்தியாவில் பிறந்தவன்தான் நாட்டை ஆள வேண்டும், என அவர் பேசியதை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இதேபோல, மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தை ஆளும் விபரீத எண்ணம் பாஜக.,வுக்கு வரக்கூடாது என்று கூறினார். இதுவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த செய்தியை படிக்க, தொடர்புடைய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், ராஜேந்திர பாலாஜி கவனமாகப் பேசும்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது. தமிழ் உணர்வுள்ள நபர்தான் தமிழகத்தை ஆள வேண்டும், இந்திய உணர்வுள்ள நபர்தான் இந்தியாவை ஆள வேண்டும் என்றுதான் ராஜேந்திர பாலாஜி பேசி வருகிறாரே ஒழிய, இந்த இடத்திலும் தமிழர்கள் உண்மையான இந்தியன் கிடையாது என்று பேசவில்லை.

குறிப்பிட்ட தந்திடிவி நேரலை நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழன் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, திமுகவும், காங்கிரஸ் கட்சிகளும் வேடிக்கை பார்த்தன, என்ற கருத்தை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவர் மீதான தனிப்பட்ட அரசியல் வெறுப்புணர்வின் பேரில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போலியாகச் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆம், அதில் உள்ள நியூஸ் கார்டை பார்த்தால், Rkc என்ற தனிநபர் பெயரும், எந்த சேனல் இதனை வெளியிட்டது என்ற லோகோ அல்லது பெயர் எதுவும் இன்றி மொட்டையாக இருப்பதையும் காண முடிகிறது. அத்துடன் அதில் எழுத்துப் பிழைகளும் உள்ளதால், இது உண்மையான நியூஸ் கார்டா என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

தமிழ் டிவி சேனல் வெளியிடும் நியூஸ் கார்டுகள் முறையான லோகோ உள்ளிட்டவை கட்டாயம் இருக்கும். இப்படி மொட்டையாக, அடுத்தவர் இனிஷியல் போட்டு செய்தி வெளியிட மாட்டார்கள். இதையடுத்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டை Fotoforensics.com என்ற இணையதளத்தில் பதிவேற்றி, அது பற்றி ஆய்வு செய்தோம்.

அதில், இந்த நியூஸ் கார்டு போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என விவரம் கிடைத்தது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •