“தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேனர்?” – ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் படம்!

அரசியல் சமூக ஊடகம்

தமிழகத்தில் பேனர் வைக்க தடை விதித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வினர் வழிநெடுக நன்றி கூறி பேனர் வைத்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ADMK 2.png
Facebook LinkArchived Link

அ.தி.மு.க பேனர் வழி நெடுக்க வைக்கப்பட்டுள்ளது. அதில், பேனர் வைக்க தடை விதித்த பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பேனர் வைத்தது போல உள்ளது.

இந்த பதிவை, Chals என்பவர் 2019 செப்டம்பர் 21ம் தேதி வெளியிட்டுள்ளார். இரண்டே நாளில், அது 9900-க்கும் மேற்பட்டோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

உண்மை அறிவோம்:

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஶ்ரீ என்ற இளம்பெண் லாரி ஏறி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பேனர் வைக்கக் கூடாது என்று தங்கள் தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர்.

BBC TamilArchived Link 1
Puthiya ThalaimuraiArchived Link 2

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், “அ.தி.மு.க-வினர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட்-அவுட் வைக்கக் கூடாது” என்று அறிக்கை வெளியிட்டனர். 

Daily ThanthiArchived Link

ஆனால், முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி கூறி தமிழக அமைச்சர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வரலாகப் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் லோகோ உள்ளது. பேனரில் வெறுமனே பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

வழக்கமாக அ.தி.மு.க-வினர் வைக்கும் பேனர்களில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றே குறிப்பிடுவர். ஆனால், வித்தியாசமாக வெறும் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். நன்கு உற்றுப் படித்தால், கழக பொதுக்குழு கூட்டத்திற்கு என்பதை ஓரளவுக்கு படிக்க முடிகிறது. இதன் மூலம் இது பழைய படம் என்று தெரிகிறது.

சில தினங்களுக்கு, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அது போலியானது என்று நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்து செய்தி வெளியிட்டு இருந்தது. சாலை நெடுக பேனர், பதவியை குறிப்பிடாமல் பெயரை மட்டுமே குறிப்பிட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்த பேனர் புகைப்படம் கூட போலியானதாக இருக்கலாம் என்று தோன்றியது.

இந்த படத்தை ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்டதா, எப்போது வெளியிட்டது என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, யு.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட ட்வீட் நமக்கு கிடைத்தது.

ADMK 3.png

2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அந்த ட்வீட்டை ஏ.என்.ஐ வெளியிட்டு இருந்தது. அதில், இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிகளின் பொதுக்குழு கூட்டம் இன்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த புகைப்படத்தை எடுத்து, தவறாக எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Archived Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பேனர் வைக்க தடை விதித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து சாலை முழுக்க பேனர் வைக்கப்பட்டுள்ளது என்ற புகைப்படம் சித்தரிக்கப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

ADMK 4.png

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேனர்?” – ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False