
சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரண்டைன் சென்டரில் உள்ள நோயாளிகள் குத்தாட்டம் போடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மிகப்பெரிய அரங்கில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுகின்றனர். நிலைத் தகவலில், “சென்னையில #Corona ku பயந்து டவுசர் கிழியுது ஆனா #Corona Ward la லுங்கி டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க” என குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Freeya Vidu Machi என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 12ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இந்த வீடியோ சென்னை வர்த்தக மையத்தில் எடுக்கப்பட்டது என்று பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
குவாரண்டைன் மையம் என்பது நோயாளிகள் இருக்கும் இடம் என்று பொருள் கொள்ள முடியாது. சந்தேகத்துக்குரியவர்கள் குறைந்தது 14 நாட்கள் கண்காணிக்கப்படும் இடம். இவர்களில் சிலருக்கு கொரோனா வரலாம், வராமலும் போகலாம். இவர்கள் யாரையும் தனிமைப்படுத்தி தனித் தனி அறையில் அடைக்கவில்லை, மொத்தமாக மிகப்பெரிய அரங்கில் அடைத்துள்ளதால் பொழுதுபோக்கிற்காக நடனமாடுகின்றனர். அதே நேரத்தில் இவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. குவாரண்டைன் 14 நாட்கள் முடிந்து வீட்டுக்கு போகும்போது கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எப்படி வெளியே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமோ, அதே அளவுக்கு குவாரண்டைன் மையத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
இவர்கள் நடனமாடியது சரியா, தவறா, குவாரண்டைன் மைய நிர்வாகிகள் என்ன செய்தார்கள் என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இது சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் எடுக்கப்பட்டது என்று பகிரப்பட்டு வருவதால் இதை ஆய்வு செய்தோம்.

நாம் முதலில் Gopi Nath என்பவர் வெளியிட்ட பதிவு அடிப்படையில் இந்த ஆய்வுக் கட்டுரையை தொடங்கினோம். நாம் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்து முடித்த நிலையில், இது தவறான தகவல் என்று சிலர் குறிப்பிட்டதன் அடிப்படையில் தவறை அவர் திருத்திக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
ஆனாலும், பலரும் சென்னை நந்தம்பாக்கத்தில் இது நடந்ததாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. அதனால், இந்த கட்டுரையை வெளியிடுவது சரியானது என்ற முடிவுக்கு வந்தோம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்குள் சென்று வந்தவர்களுக்கு இது சென்னை வர்த்தக மையம் இல்லை என்பது தெரியும். மேலும், வீடியோவில் இருந்தவர்கள் எல்லோரும் வட இந்தியர்களாக இருந்தனர். எனவே, இது உண்மையில் எங்கு எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, திரிபுரா மாநிலம் அகர்த்தலாவில் குவாரண்டைன் மையத்தில் ஆடிய லுங்கி டான்ஸ் வைரலாக பரவி வருகிறது என்ற செய்தி கிடைத்தது.

மேலும், நாம் முதலில் ஆய்வு செய்த கோபிநாத் என்பவர் பதிவுக்கு Sandeep Choudhury என்பவர் கமெண்ட் செய்திருந்தார். அதில், இந்த அரங்கம் திரிபுராவின் அகர்த்தலாவில் உள்ளது. அதுவும் தன்னுடைய வசிப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. சென்னையில் நடந்தது என்று தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் லுங்கி டான்ஸ் ஆடப்பட்டது உண்மை, ஆனால் சென்னை வர்த்தக மையத்தில் உள்ள குவாரண்டைன் மையத்தில் நடக்கவில்லை, இது திரிபுராவில் நடந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சென்னை வர்த்தக மையம் குவாரண்டைன் சென்டரில் நோயாளிகள் லுங்கி டான்ஸ் ஆடினரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
