ரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்... இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
ரயிலில் தொங்கிக் கொண்டு செல்லும் வட இந்தியர்கள் என்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
ரயிலில் குழந்தையுடன் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் பெற்றோர் படம் பகிரப்பட்டுள்ளது. குழந்தை நெரிசல் காரணமாக அழுகிறது. நிலைத் தகவலில், "அடுத்த முறை ஓட்டு போடும் முன் தமிழனிடம் ஆலோசனை கேளுங்க டா வடக்கணுங்களா...." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Shabbeer என்பவர் 2020 ஜூன் 12ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் உள்ளவர்களும் இந்தியர்கள் போல உள்ளதால், வங்கதேசத்தில் எடுக்கப்படும் பல படங்கள் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் எடுக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. மும்பையிலிருந்து மேற்கு வங்கத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் என்றும், இரண்டு ரயில் பெட்டிகளுக்கு இடைப்பட்ட இணைப்பு பகுதியில் கைக்குழந்தையுடன் செல்லும் பெண் என்றும் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன.
தற்போது ரயில் பெட்டியினுள் செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் உள்ள ரயிலில் படிக்கட்டு பகுதியில் கைக்குழந்தையுடன் ஆணும், பெண்ணும் தொங்கிக் கொண்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. குழந்தை அழும் அந்த காட்சி நெஞ்சுக்குள் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. நிலைத் தகவலில் இனி ஓட்டுப் போடுவதற்கு முன்பு தனியாக தமிழனிடம் வட இந்தியர்கள் ஆலோசனை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த புகைப்படம் வட இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது போல குறிப்பிட்டுள்ளதாக, தெரிகிறது. எனவே, இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
முன்பு நடத்திய ஆய்வுகள் அடிப்படையில் ரயில் பெட்டியைப் பார்க்கும்போது அது வங்கதேச ரயில் போல உள்ளது. இந்த பெட்டி வங்கதேசத்தின் பழைய இண்டர்சிட்டி ரயில் போல தெரிகிறது.
ரயில் பெட்டியில் வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்திய ரயில்களில் இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். மாநில மொழிகளில் எழுதப்படுவது இல்லை.
மீட்டர் கேஜ், பிராட் கேஜ் இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் இயங்கும் வகையில் மூன்று தண்டவாளம் இருப்பதைக் காண முடிகிறது. மேற்கு வங்கத்தில் பல நூறு கி.மீ-க்கு இப்படித்தான் ரயில் தண்டவாள பாதை உள்ளது. இவை எல்லாம் இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை. வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்தன.
இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டின் நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் 10 சிறந்த பயண புகைப்படங்களுள் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கிடைத்தது. அதில் ஈத் பண்டிகையை ஒட்டி டாக்கா விமான நிலைய ரயில் நிலையத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:ரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்... இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False