
சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிரித்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின்விவரம்:

தயாநிதி மாறன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை பெற்ற திமுக, பாராளுமன்றத்தில் சாலை மேம்பாடு திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 2 மணி நேரம் மட்டுமே பயணம் காலம் இருக்கும் என்று பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன்… அப்ப நிதின் கட்கரி சிரித்தார் பாருங்க” என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த தகவலை திராவிட திருடர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 20ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை – சேலம் இடையே புதிதாக எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியைத் தமிழக அரசு தொடங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தயாநிதி மாறன் எட்டு வழிச் சாலை அமைந்தால் பயண தூரம் 2 மணி நேரம் அளவுக்கு குறையும் என்று பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து நிதின் கட்கரி சிரித்ததாகவும் பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து தயாநிதி மாறன் பேசியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல், எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தனர். முதல்வர் பேசியது உண்மையா, தவறான தகவலைத் தெரிவித்தாரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போல, நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசினாரா என்று பார்த்தோம். அப்போது நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசிய வீடியோ கிடைத்தது.
அதில், தயாநிதி மாறன் பேசுகிறார்… அப்போது, “கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த காலகட்டம், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பொற்காலமாகும். அப்போது, தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்கள் கிடைத்தன. அதன்பின், எந்த புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இப்போது கொண்டு வர முயற்சிக்கும் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை கூட கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. சென்னையை விட்டு வெளியில் வரவே 2 மணி நேரம் ஆகிறது…
(குறுக்கீடு ஏற்படுகிறது)
அந்த திட்டத்தை நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம்…
(மீண்டும் குறுக்கிடு அமைச்சர் நிதின் கட்கரியை காட்டுகின்றனர்)
தயாநிதி மாறன்: எனது பேச்சை முடிக்க விடுங்கள்.
(குறுக்கீடு ஏற்படுகிறது… அமைச்சர் நிதின் கட்கரி ஏதோ சொல்கிறார். உடன் தயாநிதிமாறன் என்னை முடிக்க விடுங்கள் என்று சிரித்தபடி கூறுகிறார்)
தயாநிதி மாறன்: நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம், அரசியல் செய்வதல்ல. சென்னையை விட்டு வாகனங்கள் வெளியில் வருவதற்கு பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. உண்மையான இந்த உண்மையான பிரச்னைக்கு தீர்வு காணாமல், வேறு பிரச்னையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, சென்னையில் நெரிசலைக் குறைக்க வேண்டும், தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அமர்கிறார்.
இந்த வீடியோவில் எந்த இடத்திலும் எட்டு வழிச் சாலை அமைந்தால் இரண்டு மணி நேர பயணம் குறையும் என்றோ, எட்டு வழிச் சாலை திட்டம் வர வேண்டும் என்றோ தயாநிதிமாறன் கூறவில்லை.
எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவாக பேசினார் என்ற சர்ச்சை குறித்து தயாநிதிமாறன் கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட தயாநிதிமாறன் பேச்சின் எழுத்து வடிவத்தை வெளியிட்டது நமக்குக் கிடைத்தது. அதில், மேற்கண்ட உரையாடல் அப்படியே இருந்தது. மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து தயாநிதிமாறன் அறிக்கை வெளியிட்டிருந்த செய்தி ஒன்றும் நமக்கு கிடைத்தது. அதில், நாடாளுமன்ற உரையாடலை தமிழில் அளித்திருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில்,
1) நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசிய வீடியோ கிடைத்துள்ளது.
2) அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், எட்டு வழிச் சாலை திட்டம் வந்தால் பயண தூரம் இரண்டு மணி நேரம் குறையும் என்று தயாநிதிமாறன் பேசவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
3) நாடாளுமன்ற பேச்சின் எழுத்து வடிவம் கிடைத்துள்ளது.
4) தவறான தகவலை முதல்வர் தெரிவித்தது தொடர்பாக தயாநிதிமாறன் வெளியிட்ட அறிக்கை தொடர்பான செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவாக தயாநிதிமாறன் பேசினார் என்றும் அப்போது அவரைப் பார்த்து நிதின் கட்கரி சிரித்தார் என்றும் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

இது அதாவது, தயாநிதிமாறன் எட்டு வழி சாலைக்கு ஆதரவா பேசினது உண்மை தான், அதற்கான தெளிவான video ஆதாரங்கள் உள்ளது, அது பொய்யென்றால் தாராளமா மான நஷ்ட வழக்கு தொடுக்கலாமே, அதுல என்ன தயக்கம்,