மைக்ரோவேவ் அடுப்பை தடைசெய்த ஜப்பான்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

சமூக ஊடகம் சர்வதேசம் மருத்துவம் I Medical

“மைக்ரோவேவ் அடுப்பு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதனால் ஜப்பான் அரசு இதை தடை செய்துள்ளது” என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விபரம்:

Facebook LinkArchived Link

” ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து “* *மைக்ரோவேவ் ஓவன்களையும்” அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த தடைக்கான காரணம்: செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளை விட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் “ரேடியோ அலைகள்” கடந்த 20 ஆண்டுகளில் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர்.

மைக்ரோவேவ் அடுப்புகளில் சூடேற்றப்பட்ட டேட் உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும் கதிர்வீச்சையும் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்தனர். ஜப்பானில் உள்ள “மைக்ரோவேவ் ஓவன்ஸ்” தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. எஸ். கொரியா அனைத்து “மைக்ரோவேவ் ஓவன்ஸ்” தொழிற்சாலைகளையும் 2021 ஆம் ஆண்டிலும், சீனா 2023 ஆம் ஆண்டிலும் மூடும் திட்டத்தை அறிவித்தது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “பிளாஸ்டிக் கோப்பையில் சூடாக எதையும் குடிக்க வேண்டாம். அல்லது மைக்ரோவேவ் உணவுகளில் சாப்பிட வேண்டாம். பிளாஸ்டிக் புற்றுநோயை ஏற்படுத்துகிறது” என்றும் சில புரிந்துகொள்ள கடினமான மொழிபெயர்பையும் சேர்த்து வெளியிட்டிருந்தனர்.

இந்த பதிவை நாட்டு மருந்து என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Vaitiyar Malick என்பவர் 2020 ஜனவரி 26 அன்று வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் மைக்ரோவேவ் அவன் பயன்பாடு மிகக்குறைவு. இருப்பினும் அது பற்றிய சந்தேகம் பலருக்கும் உள்ளது. இந்த சூழ்நிலையில் மைக்ரோவேவ் அடுப்பை ஜப்பான் தடை செய்துள்ளது என்று குறிப்பிட்டு பதிவு வெளியிட்டுள்ளார்கள். இந்த பதிவில், மைக்ரேவேவ் அவன் பற்றி குறிப்பிட்டதுடன் புற்றுநோயை ஏற்படுத்தும் விஷயங்கள், புற்றுநோய் தவிர்க்க வேண்டிய விஷயங்கள், ஆரோக்கிய வாழ்வுக்கான உணவுகள் என்று  பற்றி மிக நீண்ட பதிவாக வெளியிட்டுள்ளார்கள். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்…

முதலில் மைக்ரோவேவ் அவனை ஜப்பான் தடை செய்துள்ளதா என்று கண்டறிய கூகுளில் தேடினோம். ஆங்கிலத்தில் டைப் செய்து தேடியபோது, அது தொடர்பான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், அது தொடர்பாக பல உண்மை செய்தி கண்டறியும் ஆய்வுகள் நடந்திருப்பது தெரிந்தது. 

Search Linkfactcheck.afp.companorama.pubArchived Link

ஏ.எஃப்.பி நிறுவனத்தின் ஃபேக்ட் செக் கட்டுரையைப் பார்த்தோம். அதில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பொய்யான கேலி செய்திகளை வெளியிடும் நிறுவனம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டதாகவும், அந்த நிறுவனம் நையாண்டிக்காக அந்த பொய் செய்தியை வெளியிட்டது என்பது கூட தெரியாமல் பலரும் அதைப் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ரஷ்ய மொழியில் முதன் முதலில் அந்த செய்தி வெளியிட்டிருந்தது என்றும் அதற்கான ஆதாரத்தை அளித்திருந்தனர். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி அந்த செய்தி வெளியாகி இருந்தது. அதை மொழியாக்கம் செய்து பார்த்தபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்ற சில தகவல்கள் அதிலிருந்தன. குறிப்பாக ஜப்பான் ஹிரோஷிமா அணு குண்டு தாக்குதல் தொடங்கி, தென் கொரியா மைக்ரோவேவ் அடுப்பு உற்பத்தியை 2021ம் ஆண்டிலும், சீனா 2023ம் ஆண்டிலும் நிறுத்த முடிவெடுத்துள்ளது என்று எல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தனர். 

அந்த செய்தின் கீழே, “இது panorama.pub ஊடகத்தின் நையாண்டி பதிப்பு. இதில் இணையதளத்தில் உள்ள எந்த ஒரு செய்தியும் உண்மை இல்லை, கேலி கிண்டலுக்காக நையாண்டியாக உருவாக்கப்பட்டவை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உண்மையில் மைக்ரோவேவ் அடுப்பால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏதும் உள்ளதா என்று கண்டறிய கூகுளில் தேடினோம். அப்போது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்த தகவல் நமக்கு கிடைத்தது. அதில், மைக்ரேவேவ் அவனை தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ள கையேடு அடிப்படையில் பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், இந்த முறையில் சமையல் செய்தால் உணவில் உள்ள ஊட்டச்சத்து சிதையாது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதே நேரத்தில், மைக்ரோவேவ் அவன் பயன்பாடு பற்றி தொடர்ந்து பல அச்சம் கலந்த பதிவுகள் வெளியாகிக்கொண்டே வருவது தெரிந்தது. அவை உறுதி செய்யப்பட்டதாக இல்லை. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதையே நாம் நம்முடைய முடிவாக எடுத்துக்கொண்டோம்.

தமிழில் ஏதும் செய்தி உள்ளதா என்று தேடியபோது, டாக்டர் விகடனில் வெளியான சில கட்டுரைகள் கிடைத்தன. அதில், மைக்ரோவேவ் அவனில் சமைத்தல் புற்றுநோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

who.intArchived Link 1
vikatan.comArchived Link 2
muditalab.comArchived Link 3

காஷிரா புற்றுநோய் மையம் பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆங்கிலம் அல்லது வேறு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது போல் இல்லை. ஒரு சில கருத்துக்களைத் தவிர எதிலும் தெளிவு இல்லை. உதாரணத்துக்கு முதல் கருத்தை எடுத்துக்கொள்வோம். அதில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். எடுக்கக் கூடாது என்று சொல்கிறார்களா, இல்லை அப்படி ஒரு எண்ணெய் இல்லை என்று சொல்கிறார்களா என்று தெரியவில்லை.  விலங்கு தோற்றம் இல்லாத பால் என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன என்பது புரியவில்லை. இந்த புள்ளிகளில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. மொட்டையாக மொழியாக்கம் செய்தது போல் உள்ளது.

இந்த பதிவில் பிளாஸ்டிக்கால் உடல்நலக் குறைவு ஏற்படும், புற்றுநோயை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த தகவல் உண்மையானதுதான். அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்து வருகிறது. பிளாஸ்டிக் பற்றி டாக்டர் விகடனில் வெளியான கட்டுரை ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், பிளாஸ்டிக்கால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி மருத்துவர் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் வரை பலரிடமும் கருத்துக் கேட்டு கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

Vikatan.comArchived Link 1
Vikatan.comArchived Link 2

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கடைசியில் வாழ்வியலுக்கு சென்றுவிட்டார்கள். அதில் கூட தெளிவான பரிந்துரைகள் இல்லை. குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், அன்னாசி பழங்களை சாப்பிட வேண்டும், அன்னாசி கலவையைத் தவிர்க்க வேண்டும் என்று புரியாத வகையில் பதிவிட்டுள்ளார்கள். அதனால் அது தொடர்பான ஆய்வுக்குள் நாம் இறங்கவில்லை.

நம்முடைய ஆய்வில்,

மைக்ரோவேவ் அடுப்புக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோவேவ் அடுப்பு உடல்நலத்துக்கு பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு நமக்கு கிடைத்துள்ளது.

மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்த உணவை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வெளியான செய்தி கிடைத்துள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வரலாம் என்று குறிப்பிட்டது சரியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சிறிது உண்மையுடன் தவறான தகவல் சேர்த்து வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், மைக்ரோவேவ் அவன்களுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது என்றும், மைக்ரேவேவ் அவனில் சமைத்த உணவைச் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்றும் பதிவிட்ட பதிவு தவறானது என்றும், பிளாஸ்டிக் பயன்பாடு உடல்நலத்துக்கு கேடு என்ற தகவல் உண்மை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் நிறைய தவறான தகவல் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மைக்ரோவேவ் அடுப்பை தடைசெய்த ஜப்பான்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •