கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டார்களா?

அரசியல் சமூக ஊடகம்

கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கி அடுக்கி வைக்கப்பட்ட படம், போலீஸ் அதிகாரி பேட்டி அளிக்கும் படம், அவர் மேசையில் உள்ள கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் படம் மற்றும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவரை அழைத்துச் செல்லும் படம் என மொத்தம் நான்கு படங்களைப் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி சிறுவர்கள் உட்பட 63 பேர் கைது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Lotus Manikandan என்பவர் 2020 பிப்ரவரி 3ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பயங்கரவாத பயிற்சி, கொல்கத்தாவில் என்று குறிப்பிட்டுள்ளார்கள் எப்போது இது நடந்தது, இதற்கு ஆதாரம் என்று எதையும் அளிக்கவில்லை. எனவே, இந்த பதிவு உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கி இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தை வைத்து பலரும் வதந்தி பரப்பி வருவதும், அது தொடர்பான ஃபேக்ட் செக் கட்டுரைகள் வெளியாகி இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து தேடியபோது, 2019ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இந்த படத்தை ஒருவர் tumblr என்ற சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டது தெரிந்தது. துப்பாக்கி பிரியர் ஒருவர் துப்பாக்கி படங்களை tumblr பக்கத்தில் வெளியிட்டு வந்ததும், அதில் இந்த படத்தையும் அவர் வெளியிட்டிருந்ததும் தெரிந்தது. அதில் இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை.

tumblr.comArchived LinkSearch Link

இஸ்லாமியப் பெரியவர் பின்னால் நிற்க, போலீஸ் அதிகாரி பேட்டி அளிக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த படத்தை வைத்தும் பல ஃபேக்ட் செக் கட்டுரைகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அவற்றை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு இந்த புகைப்படம் தொடர்பான செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது, antimvikalp.com என்ற இணையதளம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். 

Search Linkantimvikalp.comArchived Link

அந்த செய்தியை மொழி பெயர்ப்பு செய்து பார்த்தோம். அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்ஜுனூர் என்ற இடத்தில் உள்ள மதராசாவில் ஆயுதங்கள் சிக்கியதாகவும் இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதில் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். 

பிஜ்ஜுனூர், மதராசா, ஆயுதங்கள் ஆகிய கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டது தெரிந்தது.

timesofindia.indiatimes.comArchived Link 1
indiatoday.inArchived Link 2

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ட்வீட்டை எம்பட் செய்திருந்தார்கள். அதில், போலீஸ் பின்னணியில் நிற்கும் இஸ்லாமியப் பெரியவர் படம் அதிலிருந்தது. அந்த செய்தியில் மதராசாவில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கிவைத்த ஆறு பேர் கைது என்று குறிப்பிட்டிருந்தனர். சிறுவர்களுக்கு தீவிரவாத, பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடவில்லை.

Archived LinkSearch Link

கொல்கத்தாவில் மதராசாவில் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு அது தொடர்பாக செய்தி ஏதும் கிடைக்கவில்லை. 

நம்முடைய ஆய்வில்,

துப்பாக்கி உள்ள படம் சமூக ஊடகத்திலிருந்து எடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெரியவர் இருக்கும் படம் உத்தரப் பிரதேசத்தில் மதராசாவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தாக கைது செய்யப்பட்டபோது எடுத்த படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்ளிட்ட 63 பேர் கைது செய்யப்படடதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உ.பி-யில் எடுக்கப்பட்ட படம் மற்றும் சமூக ஊடகத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து, கொல்கத்தாவில் பயங்கரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது என்று தவறான தகவல் சேர்த்து பகிரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டார்களா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •