
‘’தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 தருகிறேன் என்று சொன்னியே சுடல,’’ என்ற தலைப்பில், மு.கஸ்டாலின் புகைப்படத்தை மையமாக வைத்து பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

புதியதோர் தமிழகம் செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் புகைப்படத்தையும், சுப்ரமணியபுரம் படத்தில் வரும் காட்சி ஒன்றையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’தேர்தல்ல ஜெயிச்சா 72000 தருவேன், நீட், ஜிஎஸ்டியை தள்ளுபடியே செய்வேன், கல்விக்கடனை தள்ளுபடி பன்னுவேன்னு சொன்னியே சுடல.. மானம் ரோசம் இருந்தா, சோத்துல உப்பு போட்டு தின்னா அத செய் பார்ப்போம், தமிழக வேசி ஊடகங்களே, திமுக வெற்றி பெற்றதால் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லி விவாதம் நடத்துங்கள் பார்ப்போம்!,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில், ரூ.72,000 தருவோம் என்று திமுக சொன்னதாகக் கூறியுள்ள தகவல் தவறானதாகும். இப்படியான அறிவிப்பை வெளியிட்டது, காங்கிரஸ் கட்சியாகும். அதன் தலைவர் ராகுல் காந்திதான் முதலில் இவ்வாறு அறிவித்தார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.72,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல, தேர்தலில் வென்று திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று திமுக சொன்னது உண்மைதான். திமுக மட்டுமல்ல, அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இதே அறிவிப்பை தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

அதேசமயம், ஜிஎஸ்டியை ரத்து செய்வோம் என்று யாரும் கூறவில்லை. திமுக.,வும், காங்கிரஸ் கட்சியும், தங்களது தேர்தல் அறிக்கையில் தற்போதுள்ள ஜிஎஸ்டி முறையில் புதிய திருத்தங்கள் செய்யப்படும் என்றுதான் கூறியுள்ளனர்.

இதேபோல, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, உண்மைதான்.
திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதுதவிர மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதன் வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
பொதுவாக, ஒரு அரசியல் கட்சி, மக்களவை தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தால் மட்டுமே, தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வார்கள். அவ்வாறு இன்றி, எதிர்க்கட்சியாக அவர்கள் மாறும்பட்சத்தில், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வாய்ப்பில்லை. இதேபோலத்தான், மக்களவை தேர்தலில், தங்கள் கூட்டணி வென்று, மத்தியில் ஆட்சி அமைத்தால், இந்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றுதான் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. எந்த இடத்திலும், தேர்தலில் ஜெயித்தாலே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் உள்பட எந்த திமுக.,வினரும் கூறவில்லை. இது தேர்தல் வாக்குறுதி என்பது பற்றி தவறான அர்த்தம் கற்பிக்கும் பதிவாக உள்ளது.
இதுதவிர, திமுக.,வினரின் தேர்தல் அறிக்கைக்கும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை உள்ளடக்கியதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதனை வெளியிட்ட ஃபேஸ்புக் ஐடி, அதிமுக-பாஜக கூட்டணி ஆதரவானது என அதன் கவர் புகைப்படத்திலேயே தெளிவாக தெரிகிறது. மு.க.ஸ்டாலினை சுடல என்றும், ஊடகங்களை வேசி ஊடகங்கள் என்றும் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளனர்.
எனவே, தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக, இத்தகைய முன்னுக்குப் பின் முரணான பதிவை வெளியிட்டுள்ளனர் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் முன்னுக்குப் பின் முரணான தகவல் இடம்பெற்றுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தேர்தலில் ஜெயித்தால் ரூ.72000 பணம் தருகிறோம் என்று ஸ்டாலின் சொன்னாரா?
Fact Check By: Parthiban SResult: Mixture
