
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் என்று தி.மு.க சார்பில் கருப்பு பலூன் பறக்கப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
இரண்டு படங்களை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். முதல் படத்தில் பிரம்மாண்ட கருப்பு பலூன் பறக்கவிடப்படுகிறது. பலூனில், “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் – சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க” என்று எழுதப்பட்டுள்ளது.
அடுத்த படத்தில், “சைனீஸ்ல எழுதுங்கடா அப்போதான் கொரோனாக்கு புரியும்” என்று ஸ்டாலின் என்று பெயர் எழுதப்பட்ட நபர் கூறுகிறார். இந்த பதிவை, Vechu Senjing என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 3ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மோடி தமிழகத்துக்கு வந்த போது தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் நடந்தது. அவர் தமிழகம் வரும்போது எல்லாம் கோபேக் மோடி என்ற டேக் ட்விட்டரில டிரெண்ட் ஆவது வழக்கம். இந்த படத்தில் மோடி என்று எழுதப்பட்டதை அகற்றிவிட்டு கொரோனா என்ற எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. இருப்பினும், இந்த படம் உண்மையானது என்று கருதி அதை வைத்து மீம்ஸ் ஸ்டைலில் பதிவை வெளியிட்டுள்ளனர்.
கோ பேக் மோடி, தி.மு.க கருப்பு பலூன் போராட்டம் ஆகிய கீ வார்த்தைகளை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடினோம். அப்போது அசல் படம் நமக்கு கிடைத்தது.

thehindubusinessline.com | Archived Link 1 |
thewire.in | Archived Link 2 |
oneindia.com | Archived Link 3 |
2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி சென்னை வந்தபோது தி.மு.க-வினர் பலூன்களை பறக்கவிட்டதாக பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தோம்… இந்து நாளிதழ் வெளியிட்ட படத்தை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில், கொரோனாவுக்கு எதிராக தி.மு.க பலூன் பறக்கவிட்டதாக பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோ பேக் கொரோனா பலூன் பறக்க விட்டார்களா தி.மு.க-வினர்?
Fact Check By: Chendur PandianResult: False
