பிரதமர் மோடி கொல்கத்தாவில் போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்தாரா?

அரசியல் இந்தியா

‘’போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்த மோடி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படம் மற்றும் மோடி கப்பலில் செல்லும் புகைப்படம், மோடிக்கு எதிரான போராட்டத்தின் புகைப்படம் ஆகியவற்றை கொலாஜ் முறையில் ஒன்று சேர்த்து, அதில், மேற்கு வங்கத்தில் Go Back Modi போராட்டம் எதிரொலி, படகில் பயணித்த மோடி, என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 11ம் தேதி மேற்கு வங்கம் சென்றிருந்தார். மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அப்போது எடுக்கப்பட்டதுதான். ஆனால், இதனை பார்க்கும்போது பிரதமர் மோடி, போராட்டங்களை கண்டு பயந்து படகில் பயணித்தது போலவும், சாலை வழியே நிறைய போராட்டங்கள் நடப்பதால் வேறு வழியின்றி அவர் படகில் பயணிப்பது போலவும் தோன்றுகிறது.

உண்மையில் நடந்தது வேறு. ஆம், போராட்டம் நடைபெற்றாலும், கொல்கத்தா விமான நிலையம் வழியாகத்தான் பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். அங்குதான் அவர் தங்கியிருந்தார். 

இதுதவிர, கொல்கத்தா ஹூக்ளி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பேளூர் மடத்திற்கும் பிரதமர் மோடி நேரில் சென்றிருந்தார். சுவாமி விவேகானந்தர் தோற்றுவித்த ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையிடமான பேளூர் மடத்தில் உள்ள பாரம்பரிய இடங்களை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, அதே மடத்தின் வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் இறுதியாக தியானம் செய்த, உயிர் நீத்த பால்கனி அறையையும் பார்வையிட்டார். அந்த பால்கனி ஹூக்ளி ஆற்றை நோக்கி அமைந்துள்ளது. இந்த மடத்திற்குச் செல்ல பல வழிகள் இருந்தாலும், ஹவுரா மேம்பாலத்தை ஒட்டிய ஆற்று தடத்தில் படகில் செல்வது மிக எளிதாகும். அவ்வாறு பிரதமர் மோடி படகில் சென்றபோது எடுத்த புகைப்படம்தான் இது. 

இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்த புகைப்படத்தை பிரதமர் மோடியே அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Archived Link 1Archived Link 2

இது மட்டுமின்றி, தனது பயணத்தை ஒட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் நேரில் சந்தித்து மோடி பேசினார். இருவரும் அரசியல் களத்தில் எதிரிகளாகச் செயல்பட்டாலும், கடும் போராட்டத்திற்கு இடையே இருவரும் நேரில் மிகவும் நட்பாக பேசியது பலரையும் வியப்படையவே செய்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) பிரதமர் மோடியின் மேற்கு வங்க பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து, தவறான தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
2) படகில் பயணித்ததற்கான காரணத்தை பிரதமர் மோடியே அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உண்மையுடன் தவறான தகவல் கலந்து பகிரப்பட்டதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பிரதமர் மோடி கொல்கத்தாவில் போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False