
ஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
இந்தியில் இரண்டு நபர்கள் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவில் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரத்தை பிராமணர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Faizal Faizal என்பவர் விவாதிப்போம் வாங்க ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 மார்ச் 11ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியில் பேசுகின்றனர், ஆஸ்திரேலியாவில் பிராமண் பைஸ் என்ற பெயரில் உள்ள பெயர்ப் பலகையைக் காட்டுகிறார்கள் என்பதால் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்தது. பிராமணர்கள் பசுக்களை தெய்வமாக வணங்குகின்றனர். அப்படியே இறைச்சிக்காக வியாபாரம் செய்வதாக இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக செய்வார்களா என்ற சந்தேகமும் எழுந்தது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
பிராமண் பைஸ், ஆஸ்திரேலியா ஆகிய கீ வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடினோம். Brahman Pies என்று டைப் செய்து தேடியதும் அந்த நிறுவனத்தின் இணையதளம், பிராமண் என்ற பெயரில் உள்ள ஆஸ்திரேலிய பசு இனம் பற்றிய செய்திகளுடன் உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரைகளும் கிடைத்தன.

Search Link |
ஆய்வுக் கட்டுரைகளை ஓரங்கட்டிவிட்டு இணையதளத்துக்குச் சென்று பார்த்தோம்… அப்போது அது 100 சதவிகிதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் என்றும், 100 ஆண்டு பாரம்பரிய ரெசிப்பிக்களை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது பிராமண் பைஸ் நிறுவனம் இந்த வீடியோ தொடர்பாக ஒரு விளக்கத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், “இந்த வீடியோ பற்றி எங்கள் கவனத்துக்கு பலராலும் கொண்டுவரப்பட்டது. எங்களுக்கு இந்தி தெரியாத நிலையில் இந்த வீடியோ பற்றிய விளக்கத்தை அளிக்கும்படி மக்கள் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளோம்.

Facebook Link | Archived Link |
அதில், ‘’இது 100 சதவிகிதம் ஆஸ்திரேலிய நிறுவனம் (இந்தியர்களுடையது இல்லை).
பிராமணர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.
பிராமண் பைஸ் என்ற பெயர் பிராமண் பசுவின் அடிப்படையில் வைக்கப்பட்டது. இந்த பசு இனம் ஆஸ்திரேலியா முழுக்க உள்ளது. இது பற்றி தெரியவில்லை என்றால் ஆய்வு செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் எங்களை தொடர்புகொண்டு இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார், பெயரின் காரணம் என்ன என்று எந்த ஒரு விளக்கத்தையும் கேட்கவில்லை.
இந்த வீடியோவில் உள்ள தகவல் தவறானது. இதன் மூலம் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறோம் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவில் பிரமாணர்கள் பசுக்களை கொன்று விற்பனை செய்கிறார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார்களா?- விபரீத ஃபேஸ்புக் வீடியோ
Fact Check By: Chendur PandianResult: False
