Rapid Fact Check: பிஸ்கட்டுக்காக மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்கள் என்று பரவும் படம் உண்மையா?
பிஸ்கட்டுகளுக்காக மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்கள் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook 1 I Archive
வெளிநாட்டு பெண்கள் ஏதோ வீசுவது போலவும் அதை சிறுவர்கள் எடுக்க போட்டி போடுவது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதனுடன், "பிஸ்கட்டுகளுக்காக மதமாறியவன் பாவாடைநாடான்னு நாம சொன்ன கேட்க மாட்டேன்கிறானுங்க நீங்களே பாருங்க" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்பட பதிவை சரண்வேலன் இந்து என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடார் சமுகத்தில் உள்ள கிறிஸ்தவர்களை இழிவு செய்யும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியில் சில சமூகத்தினர் உடை உடுத்துவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக பெண்கள் மேலாடை அணியத் தடை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஐயா வைகுண்டர் போராடினார் என்று வரலாறு கூறுகிறது. கிறிஸ்தவ பெண்கள் மேலாடை அணியத் தடை இல்லை என்பதால் பலரும் மதம் மாறினார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வரலாற்று ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், பிஸ்கட்டுக்காக (உணவுக்காக) நாடார்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டினர் பிஸ்கட் வீச, அதை பெற நாடார்கள் மதம் மாறிய காட்சியா இது என்று மட்டும் ஆய்வு செய்தோம். இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் மறைந்த போது, "மக்களை பிச்சைக்காரர்களாக நடத்திய எலிசபெத் அரசி" இதே வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
உண்மைப் பதிவைக் காண: catalogue-lumiere.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், வெளிநாட்டு பெண்களுக்கு பின்புறம் உள்ள கட்டிடத்தில் சீன எழுத்துக்கள் இருப்பதை காண முடிகிறது. புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, catalogue-lumiere.com என்ற பிரெஞ்சு இணையதளத்தில் இந்த வீடியோ காட்சி இருப்பது நமக்குத் தெரிந்தது.
அந்த வீடியோ பற்றிய குறிப்பு பகுதியில், "இந்த வீடியோ 1899 ஏப்ரல் 28 – 1900 மார்ச் 2-க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் காட்சி. அப்போதைய ஃபிரெஞ்சு இந்தோ சீனா என்று அறியப்பட்ட இன்றைய வியட்நாமில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வியட்நாம் மக்களிடையே நாணயங்களை வீசியதைப் படமாக எடுத்து 1901ல் பிரான்சில் திரைப்படமாகத் திரையிடப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
வீடியோவில் இருக்கும் பெண்களின் பெயர் திருமதி பால் டூமர், செல்வி பால் டூமர் (Miss Paul Doumer , Mrs Paul Doumer) என்று குறிப்பிட்டிருந்தனர். வியட்நாம் மக்கள், சிறுவர்கள் மத்தியில்அவர்கள் நாணயங்களை வீச, அதை கேப்ரியல் வேயர் (Gabriel Veyre) என்பவர் வீடியோ படமாக பதிவு செய்துள்ளார் என்று தகவல் நமக்கு கிடைத்தது.
இதன் மூலம் இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் இந்தியர்களோ, குறிப்பாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்று கிறிஸ்தவ நாடார்களோ இல்லை என்பது உறுதியாகிறது. குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்பட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கிறிஸ்தவ நாடார்கள் பிஸ்கட்டுகளுக்காக மதம் மாறிய காட்சி என்று பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ வியட்நாமில் நூற்றாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:Rapid Fact Check: பிஸ்கட்டுக்காக மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்கள் என்று பரவும் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False