
‘’அப்பா, அம்மா இல்லாத மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இதில், கிராம நிர்வாக அலுவலர் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர் விவரம் எதுவும் வெளியிடவில்லை. அத்துடன், ‘’நமது மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 கல்விச் செலவுக்காக நமது தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது,’’ என்று விரிவாக எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையாக இருக்கும் என்று நம்பி, பலரும் ஷேர் செய்வதால், இது பலரை தவறாக வழிநடத்தக்கூடியதாக உள்ளதென்று தெளிவாகிறது. எனவே, சந்தேகத்தின் பேரில் இப்படி ஏதேனும் அறிவிப்பு அல்லது அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம்.
வழக்கமாக, மாணவர்களுக்கு அவரவர் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் தமிழக அரசு கல்வி நிதி உதவி தருகிறது. இது ஆண்டுதோறும் ஒருமுறை தரப்படுவதாகும். இதுதவிர சில சிறப்பு நிதி உதவித் திட்டங்களை, தமிழக மாணவ, மாணவியருக்காக தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது.
Ta.vikaspedia.in Link | Archived Link |
அதேசமயம், ஆதரவற்ற, பெற்றோர் இல்லாத குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதந்தோறும் ரூ.4000 வரை வழங்கப்படுகிறது. எனினும், இது ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த வளர்ப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Makkalkural.net Link | Archived Link |
இதைத்தொடர்ந்து, சேலம் தாசில்தார் மாதேஸ்வரனிடம் விசாரித்தோம். ‘’இப்படி எதுவும் உதவித் திட்டம், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை; அறிவிக்கப்படவும் இல்லை,’’ என்றார்.
இதுதவிர, சேலம் நெய்க்காரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நமது நண்பர் ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இதே மறுப்பை தெரிவித்தார். ‘’அப்படி ஏதேனும் திட்டம் நடைமுறையில் இருந்தாலோ, அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலோ அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் எங்களுக்கு தெரியவந்திருக்கும். அப்படி எதுவும் இதுவரை கேள்விப்படவில்லை,’’ என்று குறிப்பிட்டார்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்காக நிதி உதவி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் கல்விச் செலவுக்கு நிதி உதவி வழங்குவது போன்ற திட்டம் எதுவும் இல்லை.
2) நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், குறிப்பிட்ட தகவலைச் சொன்ன கிராம நிர்வாக அலுவலர் யார் என்று கூறவே இல்லை.
3) இதுபற்றி நாம் தாசில்தார் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகியோரிடம் விளக்கம் பெற்றுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் மக்களை குழப்பக்கூடிய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா?
Fact Check By: Pankaj IyerResult: False
