
கூடங்குளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அணுக்கழிவு மையம் தொடர்பாக தி.மு.க எதுவும் பேசவில்லை என்றும் ஆந்திராவில் இந்த மையத்தை அமைத்தால் எதிர்த்திருப்பார்கள் என்றும் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில், “கூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணு கழிவு மையம் – செய்தி” என்று பெரிதாக உள்ளது. இவற்றுக்கு கீழ், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த இன்பதுரை படத்தையும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க-வைச் சேர்ந்த ஞான திரவியராஜ் படத்தையும் வைத்துள்ளனர். இதன் கீழ், “கூடங்குளம் அணுக்கழிவு மையத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி எம்.பி, எம்.எல்.ஏ எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிலைத்தகவலில், “அதிமுக அடிமை என தெரியும்..! சுயமரியாதை திமுக எங்கே போனது.. ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி எங்கும் பேசவில்லையே..! ஒரு வேளை தன் தாய்நாடான ஆந்திராவில் அணுக்கழிவுகளை கொட்டினால்தான் எதிர்த்து பேசும் போல.. #தெலுங்குதிமுக” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அணு உலைக் கழிவு மையத்துக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தி.மு.க தலைவரின் தாய்நாடு ஆந்திரா என்றும்… அங்கு அணுக்கழிவுகளை கொட்டினால் எதிர்த்துப் பேசுவார் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவை, I Support Seeman NTK என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூன் 14ம் தேதி Thangappan Madurai என்பவர் பகிர்ந்துள்ளார். இது உண்மை என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுஉலை செயல்பட்டு வருகிறது. இந்த அணு உலை மையம் பாதுகாப்பானது இல்லை. அதனால் மூட வேண்டும் என்று மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல தொடர்ந்து அணு மின் உலையிலும் பழுது ஏற்பட்டு வருகிறது. அணு உலையில் பிரச்னை உள்ளது என்று இந்திய அணுசக்தி துறைத் தலைவரே ஒப்புக்கொண்டதும் நடந்தது.
இந்த நிலையில், கூடங்குளம் அணு உலையில் இருந்து வரும் கழிவுகளை பாதுகாப்பாக சேமிப்பது பற்றிய பிரச்னை எழுந்தது. கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வெளியே இந்த அணுக் கழிவு மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அணுமின் நிலையத்துக்குள்ளேயே கழிவுகளை சேமித்து வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஜூலை 10ம் தேதி நடத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
கூடங்குளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அணுக் கழிவு மையம் பற்றி தி.மு.க தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லையா என்று ஆய்வு செய்தோம். தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ இணைய தளம், ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்துக்குச் சென்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூடங்குளம் தொடர்பாக அறிக்கை ஏதும் வெளியிட்டுள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தி.மு.க இணைய தளத்தில் ஜூன் மாதம் வெளியான அறிக்கை ஏதும் இடம் பெறவில்லை.
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தோம். அதில், அணு உலை எதிர்ப்பு தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நமக்கு கிடைத்தது. 2019 ஜூன் 8ம் தேதி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை மு.க.ஸ்டாலின் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில், “2022 ஆம் வருடத்திற்குள் AFR கட்டி முடித்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ள நிலையில், கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே AFR கட்டுவதற்கு – வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரத்தில் பொதுமக்கள் “கருத்துக் கேட்புக் கூட்டம்” நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, அதிமுக அரசின் கீழ் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே அறிவித்திருப்பதிலிருந்து- உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து அணுக் கழிவுகளினால் விளையும் ஆபத்தை உரிய காலத்தில் தடுத்திட மத்திய பா.ஜ.க. அரசு தவறியதோடு மட்டுமில்லாமல்- மாநில அதிமுக அரசும் இதில் அலட்சியத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது. தமிழக மக்களின் உயிரைப் பணயமாக வைத்து- சுற்றுப்புறச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் விதத்தில் கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR வசதிகளை உருவாக்குவது மனித உயிர்களை “சோதனைக்கூடப் பொருட்களாக” ஆக்குவதற்கு மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்ற சந்தேகமே எழுகிறது. ஆகவே “கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும்” என்றும், “புதிதாக நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும்” என்றும் பொதுமக்களும், இந்த அணு உலைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வரும் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பும் கோருவதில் முழுமையான நியாயம் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராதாபுரம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் அச்சத்தையும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் உரிய வகையில் வாய்மொழியாகவும் எழுத்துப் பூர்வமாகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் பணிகளுக்கு கடும் எதிர்ப்புகளை அழுத்தமாகப் பதிவு செய்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மேற்கண்ட எச்சரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் நன்கு நினைவில் கொண்டு மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே AFR கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக ஜூன் 25ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
கருத்து கேட்புக் கூட்டம் ஜூலை 10ம் தேதிதான் நடைபெற உள்ளது. அதில், தி.மு.க-வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பினை அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அப்படி இருக்கையில், அணுக் கழிவு மையம் அமைக்க தி.மு.க எதிர்ப்பு தெரிவிக்காதது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. இப்போதே மக்கள் பிரதிநிதிகள் கூடங்குளம் முன்பு படுக்கையை விரித்து படுத்துவிட வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.
தி.மு.க இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் கட்சி மக்கள் பிரதிநிதிகள் அழுத்தமாக எதிர்ப்பினை பதிவு செய்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நமக்கு கிடைத்துள்ளதை அடுத்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
