பாதிரியார் ஒருவர் காவி உடை உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற நடவடிக்கையில் இறங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link 1Archived Link 1
Facebook Link 2Archived Link 2

காவி உடுத்தி பூணூல் அணிந்த ஒருவர் மைக் பிடித்து பேசுகிறார். அருகில் கிறிஸ்தவ பாதிரியார் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது "காவி உடுத்தி பூணூல் அணிந்த பாதிரியார். புதிய மதமாற்ற அடவு.. இப்படி பிழைப்பதுக்கு பதிலா... இந்து மதத்துக்கே திரும்பி வாருங்கள் கிறித்தவர்களே" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படம் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. இது உண்மையா என்று நம்முடைய வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் இதை பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது. ஃபேஸ்புக்கில் பாஜக குமரிமாவட்டம் என்ற பக்கத்தில் Manikandan‎ என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்திருந்தார். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

காவி உடுத்தி பூணூல் அணிந்த பாதிரியார் எனக் குறிப்பிட்டிருந்தனர். உண்மையில் மைக்கில் பேசும் நபர் பாதிரியாரா என்று ஆய்வு செய்தோம். இந்த பதிவில் இந்த நிகழ்வு எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது சில ஆண்டுகளாக இந்த படத்தை, தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. ஏமாறும் முட்டாள் இந்துக்களை கவர புதிதாக பிராண கிறிஸ்தவர் என்று குறிப்பிட்டு இந்த படத்தைப் பகிர்ந்திருந்தனர்.

Facebook LinkArchived Link

தொடர்ந்து தேடியபோது இந்த சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2018ம் ஆண்டு நடந்த புனித வெள்ளி சிலுவைப் பாதை நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. David raju Nakka என்ற பாதிரியார் இது தொடர்பான பதிவை 2018 மார்ச் 30ம் தேதி வெளியிட்டிருந்தார். அதில், இந்து அர்ச்சகர் ஒருவர் சிலுவையின் முன்பு முழந்தால்படியிட்டார் எனக் குறிப்பிட்டிருந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் உடன் 2018 ஏப்ரல் 10ம் தேதி ட்வீட் பதிவு வெளியாகி இருந்தது.

Archived Link

அதில், இந்த காவி உடை உடுத்திய நபர் 9 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். ஆனால், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் ஹனுமான் கோவிலில் அர்ச்சகராக கடந்த வாரம் வரை வேலை செய்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதிரியார் டேவிட் ராஜு தன் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அர்ச்சகரை மதமாற்றம் செய்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இவர் ஹனுமான் கோவிலில் ஸ்டார் மாட்டியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் அந்த அர்ச்சகர் வீடு, அவர் வேலை செய்த கோவில் படங்களும் இருந்தன. எனவே, இவர் பாதிரியார் இல்லை என்பது தெரிகிறது.

Facebook LinkArchived Link

பாதிரியார் டேவிட் ராஜுவின் ஃபேஸ்புக் பதிவை ஆய்வு செய்தபோது, சர்ச்சைக்குரிய பதிவை அவர் நீக்கியிருந்தது தெரிந்தது. ஆனால், மார்ச் 30ம் தேதி சிலுவைப் பாதை பயணம் மேற்கொண்ட படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் கூகுளில் கீ வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு தேடியபோது சம்பவம் தொடர்பான முழு தகவலும் கிடைத்தது. படத்தில் மைக் பிடித்து பேசுபவரை இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேள்வி கேட்பது போலவும், அதற்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் விளக்கம் அளிக்கும் காட்சியும் இடம் பெற்றது. அதில் அனைத்து கடவுளும் ஒன்று என்பதால் அப்படி செய்தார் என்று விளக்கம் அளித்தார்.

இதனால் கிராம மக்கள், இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் விளக்கம் தெளிவு பெற்றது போல இல்லை. அவர்கள் எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். அவருடைய வீட்டு வாசலில் இந்து தெய்வங்களின் படங்கள் பதிக்கப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது. இந்த வீடியோ 2018 ஏப்ரல் 4ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, சிலுவையின் முன்பு வணக்கம் செலுத்தியதில் இருந்து 5வது நாள்.

இயேசு சிலுவை முன்பு மண்டியிட்டு வணக்கம் செய்த அர்ச்சகர் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவதாக மற்றொரு அர்ச்சகர் கூறும் பதிவும் கிடைத்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள நபர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹனுமான் கோவில் அர்ச்சகராக இருந்துள்ளார்.

எல்லா மதமும் ஒன்று என்ற நோக்கில் வணக்கம் செய்ததாக அர்ச்சகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் சிலுவைக்கு வணக்கம் செலுத்தியதால் அவர் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட வீடியோ கிடைத்துள்ளது.

இதன் மூலம் அவர் கிறிஸ்தவ பாதிரியார் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்துக்களை ஏமாற்ற காவி உடை, பூணூல் அணிந்து வந்த பாதிரியார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காவி உடுத்தி பூணூல் அணிந்து வந்த பாதிரியார்! - ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: False