
‘’குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசாருடன் சண்டையிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மகன்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Nattu nai – நாட்டு நாய் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, ஜூன் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர் ஒருவர் குடிபோதையில் சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு, போலீசாரிடம் ஆபாசமான முறையில் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நபர், அதன் மேலே, ‘’தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் மகன் குடிபோதையில் காவல்துறை அதிகாரிகளை பொரட்டி எடுக்கிறான். வாழ்க தமிழக அரசு … வளர்க காவல்துறை,’’ என்று எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி பல ஆயிரம் பேர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ காட்சி கடந்த 2 நாட்களாக, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அவர் அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் கிடையாது. இந்த சம்பவம் சென்னை நீலாங்கரையில் ஜூன் 25 அதிகாலை நேரம் நிகழ்ந்ததாகும். இதுபற்றி கூகுளில் விவரம் தேடியபோது, ஏராளமான செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

இதுபற்றி சத்தியம் டிவி வெளியிட்ட செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மதுரை மாவட்டம், விளாங்குடியை சேர்ந்த நவீன் என்பவர் சென்னை திருவான்மியூரில் பழ ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். அவர் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றபோது, குடிபோதையில் இவ்வாறு விபத்து ஏற்படுத்திவிட்டு, நீலாங்கரை போலீசாரிடம் ரகளை செய்திருக்கிறார் என தெரியவந்தது. இதுபற்றி விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, தினமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபற்றி ஒன் இந்தியா இணையதளம் 2 செய்திகளை ஃபாலோ அப் முறையில் வெளியிட்டுள்ளது. முதல் செய்தியில், விபத்து ஏற்படுத்திய நபர் பற்றிய தகவல்களும், இரண்டாவது செய்தியில், அந்த நபர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தொடர்ச்சியாக, சி.வி.சண்முகம் மகன்தான் இவர் என்று கூறி சமூக ஊடகங்களில் வதந்தி பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து, அமைச்சர் சி.வி.சண்முகமே இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, நக்கீரன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன், தற்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். ஜெயசிம்மன் என்ற அவரை பற்றி சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவதை தடுக்க வேண்டும் என்றும், அமைச்சர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தினத்தந்தி வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய இளைஞர் தன் மகன் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகமே போலீசில் புகார் அளித்துள்ளார். இப்படியான வதந்தியை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நமது வாசகர்களை எச்சரிக்க விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய அமைச்சர் மகன்; போலீசாருடன் சண்டையிட்டாரா?
Fact Check By: Parthiban SResult: False
