சிறுவன் ஒருவன் மது அருந்தி தரையில் தள்ளாடி விழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

Savukku Shankar Army என்ற ட்விட்டர் பக்கம், சிறுவன் ஒருவன் மது அருந்திவிட்டு தரையில் தள்ளாடி விழும் வீடியோவை பகிர்ந்து, எங்க போய் முடியப்போகுதோ.. நிலைமை ரொம்ப மோசமாக போகுது" என்று குறிப்பிட்டிருந்தது. அதனுடன் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜியை டேக் செய்திருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திராவிட மாடலின் இரண்டாண்டு சாதனைகளில் இந்த வீடியோ இடம் பெறுமா என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு மதுவை கட்டாயமாகக் கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன. 2016ம் ஆண்டில் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் சிறுவனுக்கு மது கொடுத்து வீடியோ எடுத்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 2015ம் ஆண்டு திருவண்ணாமலையில் சிறுவனுக்கு மது கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் தற்போது, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே மது விற்பனை செய்யப்படுவது போல, மு.க.ஸ்டாலின் அரசின் சாதனை என்று குறிப்பிட்டு மது குடிக்கும் சிறுவன் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தமிழ்நாட்டில் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். சிலர் இதை யூடியூபில் பதிவேற்றிவிட்டு அகற்றியிருப்பது தெரிந்தது. தமிழ்நாட்டில், மிக சமீபத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்தோம்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

"மது உடலுக்கு கேடு. எனவே மதுவை அருந்தாதீர்கள்" என்று குறிப்பிட்டு கடந்த ஏப்ரல் 29ம் தேதியை அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டிருந்தது. இதனுடன், "இது பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் பிரச்னை ஏதும் இருந்தால் எனக்கு மெசேஜ் செய்யுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வீடியோ எதுவும் தமிழில் இல்லை. அதே நேரத்தில் "Timli" விரும்புகிறவர்களுக்கான பக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிலி என்றால் என்ன என்று தேடிப் பார்த்தோம். இது குஜராத்தின் ஒரு வகையான பழங்குடியின நடனம் என்று நமக்குத் தகவல் கிடைத்தது. இதன் மூலம் குஜராத்தியில் வெளியான பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து, தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சி காரணமாகச் சிறுவன் ஒருவன் குடித்துவிட்டுத் தடுமாறி விழுந்தான் என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத்தில் பொழுதுபோக்கு காரணத்துக்காக என்று குறிப்பிட்டு எடுக்கப்பட்ட சிறுவன் மது அருந்துவது போன்ற வீடியோவை தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேபக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திராவிட ஆட்சியில் மது அருந்தும் சிறுவன் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False