ஷேர் செய்தால் உதவி கிடைக்குமா? – சேலம் மாணவி பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

சமூக ஊடகம் | Social சமூகம்

தொடர்ந்து படிக்க வசதி இல்லாத சேலம் மாணவி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த பதிவை ஷேர் செய்தாலே உதவி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Girl 2.png

Facebook Link I Archived Link

இளம் பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “சேலத்தில் சிறு கிராமத்தில் இருக்கிறேன். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்தும் தொடர்ந்து படிக்க வசதி இல்லை. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் எனக்கு உதவி கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Iswarya என்பவர் 2019 ஜனவரி 31ம் தேதி வெளியிட்டுள்ளார். 94 ஆயிரம் பேர் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

பதிவில் உள்ள பெண் யார், எந்த ஊர், பிளஸ் 2-வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றார், எந்த கல்லூரியில் சேர உள்ளார், அவருக்கு உதவ வேண்டும் என்றால் எப்படி உதவுவது என்று எந்த தகவலும் இல்லை. 

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், “நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷேருக்கும் எனக்கு உதவி கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர். படத்தில் உள்ளவர், பதிவை வெளியிட்ட Iswarya என்ற ஃபேஸ்புக் ஐடி நபர் போல இல்லை. வெறுமனே ஃபார்வர்ட் மெசேஜ் போலவே இருந்தது. இதை ஷேர் செய்வதால் அந்த பெண்ணுக்கு எப்படி உதவி கிடைக்கும் என்று குறிப்பிடவில்லை. அப்படியே உதவி கிடைத்தாலும் படத்தில் உள்ள பெண்ணுக்கு அது செல்லுமா, பதிவை வெளியிட்டவருக்கு போகுமா என்று குறிப்பிடவில்லை.

இப்படி ஃபேஸ்புக் போஸ்ட்டை ஷேர் செய்வதன் மூலம் ஃபேஸ்புக் யாருக்கும் பணம் உதவி கொடுப்பதும் இல்லை. இது தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதேனும் விளக்கம் உள்ளதா என்று தேடினோம். அப்போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் ஒருவர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியது தெரியவந்தது.

அதில், லைக், ஷேர் செய்வதால் யாருக்கும் பணம் கொடுப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், இப்படி லைக், ஷேர் செய்யச் சொல்வதை ஃபேஸ்புக் நிறுவனம் “Like Farming” என்று சொல்கிறது. இப்படி லைக், ஷேர் செய்வதன் மூலம் நமக்குத் தெரியாமலேயே பொய்யான தகவலை நாம் பரப்புகிறோம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், இப்படி அந்த பக்கத்துக்கு அதிக லைக்ஸ் வாங்கிவிட்டு, அதைக் காட்டியே வேறு யாருக்காவது அந்த பக்கத்தை விற்பனை செய்துவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

Girl 3.png

தொடர்ந்து நம்முடைய தேடலில், ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் என யாரும் இதுபோன்ற பதிவுகளுக்கு பணம் தருவது இல்லை என்று தெரிந்தது. இது பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

படத்தில் உள்ள பெண் யார் என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த பெண்ணின் புகைப்படத்தை சில ஆண்டுகளாக சமூக ஊடகத்தில் பலரும் பயன்படுத்தி வருவது தெரிந்தது. அதனால், யார் இவர், எப்படி இவருடைய புகைப்படம் சமூக ஊடகத்தில் பகிரப்படுகிறது என்பதை கண்டறிய முடியவில்லை.

Girl 4.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டவரின் பின்னணியை ஆய்வு செய்தோம். அதில் தன்னைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அதே நேரத்தில், “இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு சார் பக்கம். இங்கு வெளியிடப்படும் கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் நேயர்கள் விருப்பம் சார்ந்தது. எவ்விதத்திலும் நாம் பொறுப்பாளிகள் அல்ல” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Girl 5.png

இந்த பக்கத்தில் வெளியாகும் பதிவுகளைப் பார்த்தோம். பெண்களின் படங்களைப் பகிர்ந்து ஆங்கிலம் பேசுவது எப்படி என்று சில நல்ல விஷயங்களை பகிர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல இருந்தது. பின்னே செல்ல செல்ல பெண்களின் புகைப்படத்தைப் போட்டு தவறான கருத்து பகிர்ந்தது தெரியவந்தது. 

Girl 6.png

இதன் மூலம் அதிக லைக்ஸ் பெற வேண்டும், அதிகம் பேர் இந்த பக்கத்தைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் தவறான, ஆபாசமான தகவலை தொடர்ந்து பதிவிட்டு வருவது உறுதி செய்யப்பட்டது.

நமக்குக் கிடைத்த இந்த தகவல் அடிப்படையில், சேலத்தில் இருக்கும் தனக்கு உதவும்படி பெண் கூறுவது போன்று வெளியான மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஷேர் செய்தால் உதவி கிடைக்குமா? – சேலம் மாணவி பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False