மறைந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதிமுக வேட்பாளர் பட்டியலின் அவல நிலை என்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "அதிமுக முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் 13.01.2021ல் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் பட்டியலில் கிணத்துக்கடவு வேட்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் தாமோதரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 13.1.2021ல் இறந்து போன முன்னாள் அமைச்சர் தாமோதரன் கிணத்துக்கடவு தொகுதியில் எப்படி போட்டியிடுவார். அதிமுக கட்சியில் இலட்சணம் இதுதான்.." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை திமுக இணையதள நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்சிவா என்பவர் 2021 மார்ச் 11 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இறந்து போன முன்னாள் அமைச்சர் தாமோதரன் பெயர் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்தது. இது கூட கவனிக்காமல் இருப்பார்களா என்ற சந்தேகத்துடன் அ.தி.மு.க வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்தோம். அதில், கிணத்துக்கடவு தொகுதிக்கு வேட்பாளராக, செ.தாமோதரன், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என்று பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: samayam.com 1 I Archive 1 I samayam.com 2 I Archive 2

முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரோடு உள்ளாரா, இறந்துவிட்டாரா என்று அறிய கூகுளில் டைப் செய்து தேடியபோது, முன்னாள் அமைச்சர் பா.வே.தாமோதரன் காலமானார் என்று 2021 ஜனவரி 13ம் தேதி வெளியான செய்திகள் பல கிடைத்தன. அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் செ.தாமோதரன் என்று உள்ளது. இறந்த முன்னாள் அமைச்சரின் பெயர் பா.வே.தாமோதரன் என்று இருந்தது. பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவலைப் பரப்பியிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: samayam.com I Archive I myneta.infoI Archive 2

சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்புக்கு முன்பு வரை கோவையிலிருந்த பொங்கலூர் தொகுதியில் பி.வி.தாமோதரன் போட்டியிட்டு வெற்றி பெற்றதும். 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சில ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பு இழந்ததும் தெரியவந்தது.

எஸ்.தாமோதரன் கிணத்துக்கடவு தொகுதியில் 2001 முதல் 2011 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு அவருக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. அ.ம.மு.க-வில் இருந்த அவர் அ.தி.மு.க-வில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார் என்று செய்தியும் புகைப்படமும் கிடைத்தது. மேலும், எஸ்.தாமோதரன் என்று அவருடைய ஃபேஸ்புக் பக்கமும் கிடைத்தது. அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது கிணத்துக்கடவு எஸ்.தாமோதரனுக்கு சீட் கிடைத்திருப்பது உண்மை என்றும் உறுதி செய்தனர்.

அசல் பதிவைக் காண: oneindia.com I Archive 1 I myneta.info I Archive 2

இதன் மூலம் எஸ்.தாமோதரன் என்பவருக்கு அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டதை மாற்றி, மறைந்த பா.வே.தாமோதரனுக்கு சீட் வழங்கப்பட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

முடிவு:

கிணத்துக்கடவு தொகுதி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது எஸ்.தாமோதரன் என்பதும், கடந்த 2021 ஜனவரியில் காலமானது பா.வே.தாமோதரன் என்பதும் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மறைந்த முன்னாள் அமைச்சர் தாமோதரனுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ சீட் ஒதுக்கப்பட்டதா? - பெயர் குழப்பத்தால் பரவும் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: False