
ஜெருசலேமில் தரை தொடாத மிதக்கும் பாறை ஒன்று உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
வேறு ஒரு சமூக ஊடக பதிவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், பாறை காற்றில் மிதந்தபடி உள்ளது. படத்தின் மேல், “தரை தொடாத பாறை. இடம்: ஜெருசலேம்” என்று இருந்தது.
இந்த படத்தை Vijayarani Viju என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக இந்த பாறை இருப்பதாக படம் சொல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பாறை மிதக்கிறது என்றால் அது உலகின் அதிசயங்களுள் ஒன்றாக பார்க்கப்படும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.
எனவே, ஜெருசலேம் மிதக்கும் பாறை உண்மையா என்று கண்டறிய, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. இந்த புகைப்படம் பற்றி பலரும் பல கதைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது தெரிந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக பார்த்தோம்.

இறைதூதர் முகமது நபி இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணத்தின்போது ஜெருசலேமில் உள்ள இந்த பாறையின் மீது ஏறி நின்றதாகவும் அப்போது அவரை சுமந்துகொண்டு பாறை சொர்க்கத்துக்குப் பறக்கத் தயாரானதாம். ஆனால் நபி பறக்க வேண்டாம் என்று பாறைக்கு தடை விதித்தாராம். அதனால், தரையிலிருந்து எழுந்த பாறை அன்றிலிருந்து இப்போது வரை அப்படி மிதந்துகொண்டு இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வந்துள்ளனர்.
al-habib.info | Archived Link |
ஒரு சில பதிவுகளில், இந்த பாறை சௌதி அரேபியாவில் உள்ளதாகவும், வருடத்துக்கு ஒரே ஒரு முறை 10 செ.மீ அளவுக்கு இது மேலே எழும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அல்லாவின் அதிசயங்களுள் ஒன்று என்று இதைப் பகிர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த கதைகள் எல்லாம் உண்மையா என்று ஃபேக்ட் செக் கட்டுரைகளும் வெளியாகி இருந்தது தெரிந்தது.
Archived Link |
நம்முடைய தேடலில் இந்த பாறை ஜெருசலேமில் இல்லை, சவுதி அரேபியாவில் உள்ளது என்பது தெரிந்தது. இரண்டாவது இந்த பாறை மிதக்கவில்லை, சிறிய கால் போன்ற கல் குவியல் இந்த பாறையை தாங்கி நிற்பது பல படங்கள், வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக நிறைய படங்கள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அந்த வீடியோவைப் பார்க்கும்போது, பாறை தரையைத் தொட்டபடி இருப்பது தெளிவாகிறது.
hoax-slayer.net | Archived Link |
அதே நேரத்தில், பாறை பூமியை தொடும் பகுதியில் போட்டோஷாப் மார்ஃபிங் செய்திருப்பது போலவும் உள்ளது. இதன் மூலம், அசல் படத்தை எடிட் செய்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில், ஜெருசலேமில் உள்ள மிதக்கும் பாறை என்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜெருசலேம் மிதக்கும் பாறை; பிரமிப்பு தரும் ஃபேஸ்புக் படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
