
முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தற்காலிக டெண்ட் முன்பு வயதான ஆண், பெண், ஒரு சிறு குழந்தை இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
நிலைத் தவலில், “முன்னாள் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீனின் குடும்பம் வாழும் நிலையை பாருங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Mohmed Meeran Saleem என்பவர் 2020 பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அஸ்ஸாமில் 426 குடும்பங்கள் கடந்த டிசம்பர் மாதம் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டது. உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவரின் தூண்டுதலின் அடிப்படையில் இவர்கள் வெளியேற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில் வெளியான படத்தை எடுத்து குடியரசு முன்னாள் தலைவர் பக்ருதீன் அலி குடும்பத்தினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த படத்தில் உள்ளவர்கள் பக்ருதீன் அலி குடும்பத்தினர் இல்லை, அஸ்ஸாமில் வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் என்பதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்தியா டுமாரோ என்ற ஆங்கில இணையத்தில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

indiatomorrow.net | Archived link 1 |
jamaateislamihind.org | Archived link 2 |
newscap.in | Archived link 3 |
அதில் அஸ்ஸாம் மாநிலம் பிஷ்வநாத் மாவட்டம் சோட்டியா பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ பத்மா ஹசாரிக்கா என்பவருக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காக 426 குடும்பங்கள் (தோராயமாக 1800 பேர்) தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் அவர்களின் வீடுகளை இடித்தது என்று குறிப்பிட்டிருந்தனர். இவர்களில் யாரும் பக்ருதீன் அலி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. அந்த செய்தியில், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். தமிழில் இது தொடர்பான செய்தியை தேடியபோது, பல ஊடகங்கள் இதே படத்துடன் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடியபோது, ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் (jamaateislamihind.org)என்ற இணைய தளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. அதிலும் மக்கள் வெளியேற்றப்பட்டதைக் கேள்வியுற்றதும் ஜாமத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் முகமது அமீது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகள் செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பான அந்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்திலும் செய்தி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர்.

அந்த அமைப்பின் இணையதள பக்கத்தை ஆய்வு செய்தோம். செயலாளர் (Khidmat-e-Khalq) என்று முகமது அமீத் பெயருடன் படத்தை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள நபர் முகமது அமீத் என்பது உறுதியானது.
பக்ருதீன் அலி அகமது உறவினர்கள் பெயர் என்.ஆர்.சி-யில் இருந்து விடுபட்டது தொடர்பாக தேடினோம். அவர்கள் கம்ருப் என்ற மாவட்டத்தில் உள்ளது தெரியவந்தது.

news18.com | Archived Link 1 |
vikatan.com | Archived Link 2 |
நம்முடைய ஆய்வில்,
ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் அஸ்ஸாம் மாநிலம் பிஷ்நவாத்தில் இஸ்லாமியர்கள் குடியிருப்பு அகற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படத்தில் உள்ளவர் ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தேசிய செயலாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பக்ருதீன் அலியின் சகோதரரின் வாரிசுகள் அஸ்ஸாமின் வேறு பகுதியில் வசித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தற்காலிக டெண்டில் வசிக்கும் குடியரசு முன்னாள் தலைவர் பக்ருதீன் அலியின் குடும்பத்தினர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்குதீன் அலியின் வாரிசுகள் முகாமில் உள்ளதாக பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் புகைப்படம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தற்காலிக டெண்டில் வசிக்கும் குடியரசு முன்னாள் தலைவர் ஃபக்ருதீன் அலி குடும்பம் இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
