
‘’ஹிட்லரை சந்தித்த முதல் தமிழன் ஜிடி நாயுடு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இது உண்மையா என்ற சந்தேகம் எழவே, இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link
Archived Link
நம்ம கோயம்புத்தூர் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 11 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது உண்மையில் நொய்யல் மீடியா என்ற இணையதளத்தில் வெளியான செய்தியாகும். அந்த லிங்கையே, இந்த ஃபேஸ்புக் ஐடி பகிர்ந்துள்ளது.
குறிப்பிட்ட இணையதள செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Archived Link
இதேபோல, மேலும் பலர் இந்த தகவலை உண்மை எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நொய்யல் மீடியா இணையதளம், மேற்கண்ட செய்தியை கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் வெளியிட்டுள்ளது. அதில், ஜி.டி.நாயுடு ஜெர்மனி சென்றிருந்தபோது, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஹிட்லரை சந்தித்தார் என்று கூறி, எழுதப்பட்டுள்ளது. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

முதலில், இதில் உள்ள புகைப்படம் உண்மையானதா என்ற கோணத்தில் Yandex இணையதளம் சென்று, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது உண்மையானதுதான் என்றும், ஜிடி நாயுடு ஜெர்மனி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்தது.

அதாவது, மேலே உள்ள புகைப்படம், அவர் ஜெர்மனியில் இருந்தபோது எடுக்கப்பட்டதுதான். இதுதொடர்பாக, ஜிடி நாயுடுவின் மகன் கோவையில் நிர்வகித்து வரும் கண்காட்சி மையத்தில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக, நமக்கு தகவல் கிடைத்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மோட்டார் வாகனம் தொடர்பான கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஜிடி நாயுடு மலிவு விலையிலான பிளேடு, சவரக்கத்தி, விதையில்லாத ஆரஞ்சுப் பழம் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தனது கண்டுபிடிப்புகளை ஜெர்மனியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக, ஜிடி நாயுடு, 1930களில் ஜெர்மனி சென்றிருக்கிறார். அப்போது ஹிட்லரை சந்திக்க அவர் முயற்சி மேற்கொண்டதற்கு சரியான பலன் கிடைக்கவில்லையாம். நீண்ட காத்திருப்புக்கு பிறகே, ஹிட்லரை அவரால் சந்திக்க முடிந்திருக்கிறது. இதனை அவரது வாழ்க்கை வரலாறே சொல்கிறது. அத்துடன், மேற்கண்ட புகைப்படத்தில் அவருடன் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் 170 எஸ் ரக காரினை அவர் விலைக்கு வாங்கி, இந்தியா கொண்டு வந்திருக்கிறார். அந்த கார், இப்போதும் கோவையில் உள்ள ஜிடி ஆட்டோ கண்காட்சி மையத்தில் கம்பீரமாக நிற்கிறது.

ஜிடி நாயுடுவின் முழு வாழ்க்கை வரலாறை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இருந்தாலும், ஜிடி நாயுடுதான் ஹிட்லரை சந்தித்த முதல் தமிழர் என்று சொல்லிவிட முடியாது. காரணம், அவருக்கு முன்பே செண்பகராமன் பிள்ளை போன்றோர் ஜெர்மனியில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்துள்ளனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிறப்பால் தமிழரான செண்பகராமன் பிள்ளை, 1920களிலேயே ஹிட்லரின் நெருங்கிய வட்டாரத்தில் வலம் வந்த நபர் ஆவார். ஜெர்மனி அரசியலிலும், இந்திய அரசியலிலும் தனித்த ஆதிக்கம் செலுத்திய நபர் செண்பகராமன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும். ஜிடி நாயுடுவுக்கு முன்பே, ஜெர்மனியில், நாஜிக்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த செண்பகராமன், முதல் உலகப் போரின்போது, சென்னையை தாக்க எம்டன் கப்பல் அனுப்ப காரணமாக இருந்தவர் ஆவார். ஹிட்லரின் நெருக்கமான ஆளாக இருந்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, செண்பகராமன் பிள்ளை, ஹிட்லரை விட்டு விலகிவிட்டார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, ஜிடி நாயுடு ஹிட்லரை சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், அவர்தான் ஹிட்லரை சந்தித்த முதல் தமிழர் என்ற தகவல் தவறானது என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஹிட்லரை சந்தித்த முதல் தமிழன் ஜிடி நாயுடு: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?
Fact Check By: Parthiban SResult: Mixture
