சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

அரசியல் | Politics இந்தியா | India

‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் மிக விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். 

உண்மை அறிவோம்:
ஒருவேளை இப்படி ஒரு காரணத்தை மேற்கோள் காட்டி கேரளாவில் ஆளுங்கட்சியாக உள்ள சிபிஎம் ஏதேனும் போராட்டம் அறிவித்துள்ளதா என தகவல் தேடினோம். ஆனால், நமக்கு கிடைத்த விவரம் வேறு ஒன்றாக இருந்தது. 

ஆம், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள உற்பத்தி இழப்பை சரி செய்யும் விதமாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களை புறக்கணிப்பு செய்வதாக, புகார் எழுந்துள்ளது. 

இந்த மாநிலங்களில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. எனவே, பாஜகவை எதிர்த்தும், தொழிலாளர் நலனை பாதுகாக்க வலியுறுத்தியும் மே 22ம் தேதி நாடு தழுவிய அளவில் பட்டினி போராட்டம் நடத்தப் போவதாக, காங்கிரஸ் கட்சி (ஐஎன்டியூசி), சிபிஎம் (சிஐடியூ), ஏஐடியூசி உள்ளிட்டவை அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

இதுதவிர, இதேபோல, வேளாண் துறையில் தனியார் மயம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில், சில இடங்களில் பட்டினிப் போராட்டம், மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றையும் நடத்த இந்த தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. 

Deccanherald LinkArchived Link 
The Hindu Link Archived Link 
HindustanTimes Link Archived Link 

சொன்னதைப் போலவே, மே 22ம் தேதி இந்த தொழிலாளர் சங்கத்தினர் டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் என நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். 

Newsclick.in Link Archived Link 

எனவே, கேரளாவில் உள்ள சிபிஎம் கட்சி மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளின் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றுசேர்ந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன என்று தெளிவாகிறது. ‘’தொழிலாளர் நலன்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் பறிக்கப்படுகிறது; விவசாயம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தனியார் மயம் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகிறது,’’ உள்ளிட்டவையே, மே 22, 2020 அன்று நடைபெற்ற இந்த போராட்டத்திற்கான அடிப்படை காரணம். 

எந்த இடத்திலும் சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக்கூடாது என்று சிபிஎம் கட்சி கூறவில்லை. அவ்வாறு வெளிப்படையாகக் கூறியிருந்தால், அது பெரும் விவாதமாக மாறியிருக்கும். உள்நாட்டு தொழிலாளர்களின் நலன் பற்றியே அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இறுதியாக, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே உள்ளது. ஆனால், அதற்காக, சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு வரும் நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என்று யாரும் கூறவில்லை. இப்படிச் செய்தால் இந்தியாவை விட சீனாவுக்கே நன்மை கிடைக்கும் என்று அவர்களுக்கும் தெரியும். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம், 

சீனா ஆதரவாக இந்தியாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுவதாக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அவர்கள் கடந்த மே 22, 2020 அன்று நடத்திய போராட்டத்திற்கான காரணம் வேறு ஒன்றாகும். அதுபற்றி தவறான தகவலை அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பரப்பியுள்ளனர். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தனிப்பட்ட அரசியல் கருத்துடன் தவறான தகவலை இணைத்து தகவல் பகிர்ந்துள்ளனர் என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False