எர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது?

சமூக ஊடகம் சமூகம்

மலையாள நடிகர் மம்மூட்டி கட்டிய வீடு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

பிரம்மாண்ட வீடு ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த வீடு யாருக்கு உரிமையானது என்று எந்த தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “கேரளாவில் முன்னணி நடிகர் மம்மூட்டி அவர்கள் எர்ணாகுளத்தில் புதிய இல்லம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை  Photomohan Mohana Vadivel என்பவர் மே 27, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடு பார்க்க பிரம்மாண்டமாக இருந்தது. வீடியோவின் எந்த இடத்திலும் நடிகர் மம்மூட்டி உள்ளிட்டவர்கள் வரவில்லை. உண்மையில் இது அவர் வீடுதானா, அல்லது வேறு ஏதாவது ஒரு வீடியோவை எடுத்து பகிர்ந்து வருகிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில், நடிகர் மம்மூட்டி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் புதிதாக வீடு ஏதும் சமீபத்தில் கட்டியுள்ளாரா, அது தொடர்பான செய்தி ஏதும் உள்ளதா என்று அறிய கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது மம்மூட்டியின் வீடு என்று பகிரப்படும் வீடியோ என்று கேரளாவில் இருந்து வெளியாகும் ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது தெரியவந்தது. மலையாள மனோரமா வெளியிட்டிருந்த செய்தியில் இந்த தகவல் தவறானது. ரெஜி என்பவருடைய வீட்டை மம்மூட்டியின் வீடு என்று சமூக ஊடகங்களில் பலரும் தவறாக பகிர்ந்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், ரெஜியின் சொகுசு வீடு என்று ஒரு வீடியோ யூடியூபில் வெளியிட்டிருப்பதாகவும் கொடுத்திருந்தனர். மம்மூட்டியின் வீடு என்று பகிரப்படும் அதே வீடியோதான் அது.

manoramaonline.comArchived Link 1
manoramaonline.comArchived Link 2

ஆங்கில மனோரமா, இந்த வீட்டின் உரிமையாளர் ரெஜியை தொடர்புகொண்டு பேட்டி எடுத்து, அதனை வெளியிட்டுள்ளனர்.

அந்த பேட்டியில் அவர், “கடந்த பிப்ரவரி மாதம் இந்த வீட்டை கட்டி முடித்தோம். வீட்டியின் வீடியோவை சில வீடியோகிராபர்கள் மூலம் எடுத்தோம். எங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வீடியோ எடுக்கப்பட்டது. வீடியோவை எடுத்த நபர்களில் ஒருவர் மம்மூட்டியின் வீடு என்று குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

‘’சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவவே அதிர்ச்சியடைந்தோம். இதனால் யாருக்கும் பிரச்னை இல்லை என்று முதலில் சாதாரணமாக இருந்துவிட்டோம். அதன்பிறகு எங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் எங்களுக்கு போன் செய்து விசாரித்தார்கள். பதில் அளித்து அளித்து சோர்ந்துவிட்டோம். அதனால்தான் இந்த பேட்டி அளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வீட்டை கட்டிய ரெஜி சொந்தமாக கட்டுமான நிறுவனம் வைத்துள்ளதாகவும், அதனால் அதிக செலவின்றி இந்த கட்டிடத்தை கட்டியதாகவும் கூறியிருந்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மம்மூட்டியின் வீடு என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:எர்ணாகுளத்தில் நடிகர் மம்மூட்டி கட்டிய புதிய வீட்டின் வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False