
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில், கே பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவ வீரர்கள் பேனர் பிடித்து வருவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ராணுவ வீரர்கள் பேனர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “இதுவரை சைனா ஆர்மி முன்னேறி 35 ஆயிரம் சதுர மைல் முன்னேறி வந்து உள்ளது. சாலைகள், பங்கர்கள் அமைத்து, பல டேக்ங்களை கொண்டுவந்து, ஏர் ஸ்டிரிப் நிறுவி மேப்பை மாற்றிவிட்டார்கள். ஆனா இன்னும் “கோ பேக் சைனா ஆர்மி” னு பேனர் பிடித்துக்கிட்டு தொங்கிட்டு இருக்கார் நம்ம 56 inch மாவீரர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Vijhai Shekar என்பவர் 2020 மே 30ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்துகொண்டு இந்தியப் படைகளை வெளியேறும்படி சீன ராணுவம் கூறுவதும், சீன ராணுவத்தை பின்வாங்கும்படி இந்திய ராணுவம் கூறுவதும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்திய எல்லைக்குள் நுழைந்து பெரிய பாறைகள் மீது எல்லாம் சிவப்பு பெயிண்டால் சீனா என்று சீன ராணுவத்தினர் எழுதிச் செல்வதும், அதை இந்திய ராணுவம் அழிப்பதும் தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய – சீனா இடையே லடாக் எல்லைப் பிரச்னை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் ராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்து வருகின்றன. இதனால், போர் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவத்தினரை திரும்பிச் செல்லும்படி இந்திய ராணுவ வீரர்கள் பேனர் பிடிப்பதாக படங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2017ம் ஆண்டு டோக்லாம் பிரச்னை தீவிரமாக இருந்தபோது இந்த புகைப்படத்தை பல செய்தி ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன.
இந்த படங்களை ஆய்வு செய்தபோது, ஒரு ஊடகத்தில் சீன ராணுவம் இந்த பேனரை பிடித்து நிற்பதாக குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இவர்கள் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிந்தது. அதை உறுதி செய்ய ஆதாரம் ஏதும் உள்ளதா என்று தொடர்ந்து தேடினோம். அப்போது திஸ் வீக் இன் ஏஷியா என்ற இணையதள ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் 2013ம் ஆண்டு சீன ராணுவத்தினர் இந்த பேனரை பிடித்தபடி நின்றதாகவும் ஏ.பி என்ற செய்தி ஊடகம் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் ஏ.பி இமேஜஸ் தளத்துக்குச் சென்று தேடினோம். அப்போது இந்த படத்தை 2013ம் ஆண்டு மே 5ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது தெரிந்தது. அதில், லடாகில் சீன துருப்புக்கள், “நீங்கள் எல்லையை தாண்டியுள்ளீர்கள், தயவு செய்து திரும்புங்கள்” என்று குறிப்பிட்டு பேனர் பிடித்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு இந்தியாவும் சீனாவும் லடாக்கில் படைகளை குவித்து வருவதை அடிப்படையாகக் கொண்டு பழைய வீடியோ காட்சிகள் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதில், ரெப்ரசன்டேட்டிவ் விஷ்வல்ஸ் (மாதிரி வீடியோ காட்சி) என்று குறிப்பிட்டிருந்ததை மறைத்து பலரும் இந்தியப் படைகள் சீனப் படைகளைத் திருப்பிச் செல்லும்படி பேனர் பிடித்தன என்று தவறான தகவலைப் பரப்பின. அதே போல் இந்திய ராணுவமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய எல்லையை விட்டு வெளியேறும்படி பதிவிட்டதாக போலியான ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது.

ஆனால் அதை இந்திய ராணுவம் மறுத்தது. ஆனாலும், தொடர்ந்து அது போன்று தகவல், பழைய புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கோ பேக் சீனா என்று இந்திய வீரர்கள் பேனர் பிடிப்பதும், கோ பேக் இந்தியா என்று சீன வீரர்கள் பேனர் பிடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆரம்பக் கட்டத்திலேயே ஆயுதங்களை வைத்து தாக்கிவிட முடியாது… எச்சரிக்கை செய்து வழக்கமான ஒன்றுதான்.
ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் இந்திய ராணுவம் பேனர் பிடித்த படம் இல்லை. இது 2013ல் சீன ராணுவம் பேனர் பிடித்த போது எடுத்த படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
