
‘’இந்தோனேசியாவில் உள்ள இந்த நுழைவாயிலை ராஜ ராஜ சோழன் கட்டினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே சந்தேகம் எழுப்பினார். அதன்பேரில், நாமும் விவரம் சேகரித்தோம்.
உண்மை அறிவோம்:
தமிழ் மன்னர்கள் வரலாறு என்று கூறி பெருமிதத்துடன் ஒரு வரலாற்றுக் கதை காலங் காலமாக இங்கே பேசப்பட்டு வருகிறது. இதில் சற்று கூடுதல் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில், சிலர் கற்பனைக்கு பொருந்தாத கதைகளைக் கூறி, அவற்றை ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களோடு தொடர்புபடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தமிழ் மன்னர்களை குறைத்துக் கூற நாம் விரும்பவில்லை. ஆனாலும், வரலாறு படிப்பவர்கள் சரியான தரவுகளுடன் படித்து, புரிந்துகொள்வது நலம். அரை குறையாக யாரேனும் யூடியுப்பில் போடும் வீடியோவை பார்த்துவிட்டு, தவறான தகவல்களை உண்மையென நம்பிச் செயல்படுவது தவறாகும்.
பிற்கால சோழ மன்னர்கள் வலிமை பெற்றவர்களாக விளங்கினாலும், அவர்களில் ராஜேந்திர சோழன்தான் கடல் கடந்து, கிழக்காசிய நாடுகளுக்கு படையெடுத்துச் சென்ற நபர் ஆவார். ராஜ ராஜ சோழன் காலத்திலும் கூட, அவரது மகன் மற்றும் இளவரசன் என்ற முறையில் ராஜேந்திர சோழன்தான் அதிக போர்க்களங்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். தோல்வியே சந்திக்காத நபர் என்றால் அது ராஜேந்திர சோழன்தான்.
ராஜ ராஜன், ஈழம் தவிர வேறு எங்கும் கடல் கடந்து படையெடுத்துச் சென்றதாக ஆதாரங்கள் இல்லை. ஒருசிலர் வரலாற்றை மிகைப்படுத்திக் கூறுவதை, மற்றவர்கள் நம்பிக் கொள்கிறார்கள். ராஜேந்திர சோழன் மட்டுமே, மலேசியா, ஸ்ரீவிஜயம் வரை சென்றதாகக் கூறப்படுகிறது.
ராஜ ராஜ சோழன் மறைவுக்குப் பிறகுதான், ஈழம், அந்தமான் தீவுகளை கடந்து சோழப் படைகள், பிரமாண்ட கடற்படை நிறுவி, கிழக்காசிய நாடுகள் மீது போர் எடுத்துச் செல்லும் நிகழ்வுகள் அரங்கேறின. இதுதான் நமக்குக் கிடைத்த தரவுகளின் வழியே தெரியவரும் உண்மையான வரலாறு. அந்த படையெடுப்பை செய்தவர் ராஜேந்திர சோழன்தான்.
அப்படியிருக்கும்போது, இந்தோனேசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் எப்படி நுழைவாயில் கட்டியிருப்பார் என்ற கேள்வி எழுகிறது.
இவர்கள் குறிப்பிடும் நுழைவாயில், Triumphal Arch of the Gods or Arco de Gilimanuk எனப் பெயருடையதாகும். இது இந்தோனேசியாவின் மேற்கு பாலி பகுதியில் உள்ள Gilimanuk துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. ஜாவா பகுதியை ஒட்டி இது உள்ளது. இது Khmer சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட இடமாகும். அத்துடன், ஆதிகாலம் முதலே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்களும் இங்கே ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த நுழைவாயில் கட்டியது Khmer Kings மரபில் வந்தவர்களாக இருக்கலாம் என்றே தெரிகிறது. ராஜ ராஜ சோழன் அல்லது ராஜேந்திர சோழன் கட்டியதாக இருந்தால் இவ்வளவு காலம் இதனை அங்குள்ள மக்கள் பராமரித்திருப்பார்களா என்பது சந்தேகமே.
நாம் முன்பே சொன்னது போல, இது ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்வது தவறான தகவல். ஏனெனில், கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்றது ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில்தான். அப்போது, ராஜ ராஜ சோழன் உயிருடன் இல்லை. ஒருவேளை, ராஜேந்திர சோழன் காலத்துடன் வேண்டுமானால் தொடர்புபடுத்தி ஆய்வு செய்தால், புதிய தரவுகள் கிடைக்கலாம். மற்றபடி, இதனை ராஜேந்திர சோழன் கட்டியிருக்கலாம் என்ற வாதத்தையும் முழுமையாக ஏற்க முடியாது.
உதாரணமாக, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் சோழ மன்னர்கள் கட்டிய பல கோயில்கள் மட்டுமின்றி, அவர்கள் தொடர்பான கட்டிடங்கள், அரண்மனைகள் யாவுமே எதிரிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. உள்ளூரிலேயே இந்த நிலைமை எனும்போது, வெளிநாட்டில் எப்படியிருக்கும் என்று நாம் சொல்ல தேவையில்லை.
கூடுதல் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும். இது தவிர பாலி பகுதி எப்படி உருவானது என்பது பற்றிய விரிவான வரலாற்று தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
A Short History of Bali Book PDF Link
இதற்கடுத்தப்படியாக, தொல்லியல் ஆய்வாளர் தஞ்சை ஆ.மாதவன் இதுபற்றி வெளியிட்டிருந்த கருத்து ஒன்றை காண நேரிட்டது. அவரும் இதனை தவறான தகவல் என்றே குறிப்பிடுகிறார்.
இதுபற்றி கடந்த 2017ம் ஆண்டில் சர்ச்சை ஏற்பட்டதாகவும், அப்போதே இதனை மறுத்து விளக்கம் அளித்திருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
அவரது ட்விட்டர் பதிவு லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, உரிய தொல்லியல் ஆதாரங்கள் அல்லது கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கும்வரை யாரும் இதுபோன்ற தகவல்களை உண்மை என நம்ப வேண்டாம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி இந்த ஃபேஸ்புக் தகவல் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தோனேசியாவில் உள்ள இந்த நுழைவாயிலை ராஜ ராஜ சோழன் கட்டினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False

If it is false, I am very sorry