இஸ்லாமிய புனித பயணத்திற்கு மகளை வழியனுப்பினாரா சுப்பிரமணியன் சாமி?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

இஸ்லாமிய புனித பயணம் செல்லும் தன்னுடைய மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணியன் சுவாமி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இஸ்லாமிய பெண்களுடன் சுப்பிரமணியன் சுவாமி இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தின் மீது “வெச்சான் பாருங்க ட்விஸ்ட். உம்ராவுக்கு போகும் தன் மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணிய சுவாமி” என எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவை அ.இல.சிந்தா என்பவர் 2020 ஜூலை 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுஹாசினியின் கணவர் பெயர் ஹைதர். சுஹாசினி தி இந்து நாளிதழில் பணியாற்றி வருகிறார். அதை வைத்து அவ்வப்போது சுப்பிரமணியன் சுவாமியிடம் பலரும் கேள்வி எழுப்புவது உண்டு. இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டாரே தவிர அவர் மதம் மாறவில்லை என்று அவரும் பல முறை விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித பயணமான உம்ராவுக்கு செல்லும் தன் மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணியன் சுவாமி என்று பதிவிட்டுள்ளனர். மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவர் சென்றாரா, சென்றிருக்கிறாரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

படத்தில் இருப்பது சுப்பிரமணியன் சுவாமியின் மகள் சுஹாசினியா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது 2018ம் ஆண்டு இந்த புகைப்படம் ட்விட்டரில் வெளியானது தெரியவந்தது. அதில், பா.ஜ.க முத்தலாக்குக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருவதால் பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமியுடன் இஸ்லாமிய பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த படம் பெங்களூரூ விமானநிலையத்தில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Archived Link

படத்தில் உள்ள யாரும் சுஹாசினி ஹைதர் போல இல்லை. சுஹாசினி ஹைதரின் புகைப்படம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து நமக்கு கிடைத்தது. படத்தில் உள்ள மூன்று பெண்களுடன் முகச் சாயலுடன் அவருடைய முகச் சாயல் பொருந்தவில்லை. இதன் மூலம் இது தவறான தகவல் என்பது உறுதியாகிறது.

இந்த படம் தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்று முதன் முதலில் ட்வீட் பதிவை வெளியிட்ட ஜெகதீஷ் ஷெட்டியை தொடர்புகொண்டு பேசியுள்ளது. அப்போது அவர், “இந்த புகைப்படத்தை எடுத்ததே நான்தான்.  சுப்பிரமணியன் சுவாமி விமானநிலையத்துக்கு அவசரமாக வந்த நிலையில் அந்த பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர். படத்தில் உள்ளவர்கள் சுப்பிரமணியன் சுவாமியின் மகள், பேத்திகள் இல்லை” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். 

தொடர்ந்து தேடியபோது சுஹாசினி ஹைதரை, மதம் மாறிய பெண் என ஒருவர் விமர்சித்த போது கோபத்துடன் சுப்பிரமணிய சுவாமி பதிலிட்டது தொடர்பான செய்தி கிடைத்தது.  இதன் அடிப்படையில் உம்ரா புனித பயணம் செல்லும் மகளை வழியனுப்ப வந்த சுப்பிரமணியன் சுவாமி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இஸ்லாமிய புனித பயணத்திற்கு மகளை வழியனுப்பினாரா சுப்பிரமணியன் சாமி?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •