
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மூன்று பெண்கள் அம்மா ஒருவருக்கு இனிப்பு ஊட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தான் மாநிலத்தில் ஆதரவு அற்ற நிலையிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த #தலித் #பெண்கள் மூன்று பேர் IAS தேர்வில் வெற்றி பெற்றனர்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Ambeth Valavan என்பவர் 2020 ஆகஸ்ட் 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக பகிரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றவர்கள், தமிழக அளவில் முக்கிய இடங்களைப் பிடித்தவர்கள் பற்றிய செய்தி வந்து கொண்டே இருக்கிறது, ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் வெற்றி பெற்றது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
ராஜஸ்தானில் மூன்று சகோதரிகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்களா என்று அறிய கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது 2017ம் ஆண்டில் இருந்து இது போன்ற தகவல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. மேலும் இது தொடர்பாக பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடந்திருப்பதையும் காண முடிந்தது.
2017ம் ஆண்டு இந்த செய்தி வெளியாகி உள்ளது. எனவே, 2016ம் ஆண்டு தேர்வு எழுதி 2017ம் ஆண்டு வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் இவர்கள் பெயர் உள்ளதா என்று பார்த்தோம். பட்டியலில் இவர்கள் பெயர் இல்லை.
இவற்றுக்கு நடுவே ஆர்.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகள் என்று 2017ல் வெளியான செய்திகளும் கிடைத்தன. ஆர்.ஏ.எஸ் என்பது ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் தேர்வாகும். அந்த செய்தியைப் பார்த்தோம். அதில் 2016ம் ஆண்டு தேர்வில் பங்கேற்ற கமலா சௌதிரி, கீதா சௌதிரி, மம்தா சௌதிரி என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ராஜஸ்தான் அட்மினிஸ்டிரேடிவ் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் பலரும் இவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

2017ம் ஆண்டு வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில் இவர்கள் பெயர் உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த பெயரும் இல்லை. அதே போல் ராஜஸ்தான் பொதுப் பணித் தேர்வுகள் பட்டியலில் பெயர் உள்ளதா என்று தேடினோம். அந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. எனவே, இவர்கள் ஆர்.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்களா என்று கண்டறிய முடியவில்லை. எனவே, வேறு ஏதும் நம்பகமான செய்தி கிடைக்கிறதா என்று பார்த்தோம்.
இந்தியில் வெளியான பல செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அவற்றை மொழிபெயர்த்துப் பார்த்த போது அவர்கள் ஆர்.ஐ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றதாகவும் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று எதிலும் குறிப்பிடவில்லை. சில செய்திகளில் இவர்கள் பெயரின் பின்னால் ஜாட் என்றும், இந்த பெண்களின் தந்தையின் பெயர் கோபால் புனியா என்றும் குறிப்பிட்டிருந்தனர். புனியா என்பது ஜாட் சமுதாயத்தின் ஒரு பிரிவு என்று தெரிந்தது. ஜாட் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சாதி பிரிவு என்று தகவல் கிடைத்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றனரா?
Fact Check By: Chendur PandianResult: False
