
‘’பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி என விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஜூலை 20, 2020 அன்று பகிரப்பட்ட இந்த பதிவில், பாஜக தமிழ்நாடு ட்விட்டர் ஐடியில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டதாகக் கூறி அதற்கான ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’முருகன் தமிழ்க்கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பி விட்ட கதை. கலாச்சார ஏதிலிகளாக காட்டுமிராண்டிகளாக திரிந்த ஆதித்தமிழர்களை பண்படுத்தியது வைதீக வழிபாட்டு முறைகளே – பாஜக தமிழக தலைவர், முருகன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்டதைப் போல, பாஜக தமிழ்நாடு பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடியில் (@BJP4TamilNadu) ஏதேனும் ட்வீட் வெளியிடப்பட்டதா என்று தகவல் தேடினோம். நீண்ட நேரம் தேடியும் நமக்கு அப்படியான தகவல் எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதேபோல, பாஜக தமிழக தலைவர் முருகனின் ட்விட்டர் ஐடியிலும் (@Murugan_TNBJP) தகவல் தேடினோம். அதிலும், எதுவும் காணக் கிடைக்கவில்லை.
ஒருவேளை இப்படியான பதிவை பகிர்ந்துவிட்டு, பின்னர் நீக்கிவிட்டார்களா என்ற சந்தேகத்தில், பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள், இப்படி எந்த பதிவையும் நாங்கள் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்தனர்.
அத்துடன், ட்விட்டரில் இதுபற்றி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
எனவே, இதன்பேரில், மீண்டும் அவர்களின் ட்விட்டர் ஐடி சென்று தகவல் தேடியதில், இதுபற்றிய ட்வீட் ஒன்றை காண நேர்ந்தது.
அந்த ட்வீட்டில், ‘’இந்துக்களின் கோபத்தை நேரடியாக எதிர்கொள்ள திராணி இல்லாமல் பொய்ச் செய்தி பரப்பி வரும் கோழைகள்…,‘’ என்று குறிப்பிட்டிருந்தனர். அதனை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் வேண்டுமென்றே இத்தகைய தவறான தகவலை பரப்பியுள்ளதாக, தெரிகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி எனக் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
