
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கிறிஸ்தவர், அவரது மனைவி பைபிள் வைத்திருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு அவரது தாயார் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளார். கையில் பைபிள் வைத்தபடி ஒருவர் உள்ளார். அந்த படத்துடன் பதிவு ஒன்று உள்ளது.
அதில், “படத்தில் பைபிளை கையில் பிடித்திருக்கும் பெண்மணி வேறு யாருமில்லை, உலகின் மிகப்பெரும் பணக்கார இந்து தெய்வத்தின் கோவிலின் தலைவரான ஒய்.வி.சுப்பா ரெட்டியின் மனைவி. இந்து சகோதரர்களே காலம் கடந்துவிட்டது இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், ஒய்.வி.சுப்பா ரெட்டியின் உண்மையான பெயர் யெஹோவா வின்சென்ட் சுப்பா ரெட்டி எனக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திருப்பதி கோவில் நிர்வாக போர்டில் இருந்து #சுதா_மூர்த்தி ராஜினாமா. ஜெகன் தனது மாமாவை வாரியத் தலைவராக நியமிக்கிறார். அவரது மதம் என்ன?
திருப்பதி திருமலை பாலாஜி கோவிலின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் யெஹோவா #வின்சென்ட்_சுப்பாரெட்டி (YVSubbaraddy) ஆவார். இவர் ஒரு தீவிர கிறிஸ்துவ இவாஞ்சலிஸ்ட். அவர் ஆந்திராவில் தேவாலயங்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக செயல்படுகிறார். தற்போது இந்தியாவின் பணக்கார இந்து கோவிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்துக்களை குழப்ப ஆந்திராவில் சுப்பா ரெட்டி மட்டுமே அழைக்கப்படுகிறார். திருப்பதி வெங்கடேஷ கோவிலின் பணத்தை வைத்து இப்போது தேவாலயங்களை வளர்த்து விடுவார்!!!
எந்த கிறிஸ்துவர் அல்லது வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் எந்த கோவில் நிர்வாகத்திலும் இருக்க அனுமதி இல்லை என்று உண்டியலில் ஒரு காகிதத்தை போடலாம். திருப்பதி கோவிலில் இருந்து வேறு மதத்தினரை நீக்குங்கள். Y V சுப்பரட்டியை கோவில் நிர்வாகத்திலும் இருக்க நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த செய்தியை பரப்புங்கள். திருப்பதி மற்றும் அனைத்து கோவில்களில் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் செய்தியை பரப்புங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Vinod K Pillai என்பவர் 2020 ஜூலை 11ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒய்.வி.சுப்பா ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. ஏதோ இப்போது புதிதாக நியமிக்கப்பட்டது போல தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு அவர் திருமலை திருப்பதி அறங்காவல் குழு தலைவராக நியமிக்கப்பட்ட போது அவர் ஒரு கிறிஸ்தவர் என்று குற்றம்சாட்டி தீவிர வலதுசாரிகள் வதந்தி பரப்பினர். அவர் இந்து என்று ஆய்வு செய்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் செய்தி வெளியிட்டோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தை உற்றுப் பார்த்தால் அவருடைய நெற்றியில் குங்குமம் இருப்பதைக் காண முடியும். அவருடைய பெயர் யெகோவா வின்சென்ட் சுப்பா ரெட்டியா என்று தேடிப் பார்த்தோம். அவருடைய பெயர் யெர்ரம் வெங்கட சுப்பாரெட்டி என்று தெரிந்தது. 2014ம் ஆண்டு அவர் ஓங்கல் தொகுதியில் போட்டியிட்ட போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனு அடிப்படையில் myneta.info என்ற தளம் இதை வெளியிட்டிருந்தது.
நான் ஒரு இந்து, என் மனைவி, என் குடும்பம் முழுவதும் இந்துக்கள்தான். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஷீரடி செல்கிறேன், ஆண்டுக்கு ஒரு முறை சபரி மலைக்கு விரதம் இருந்து செல்கிறேன், திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருகிறேன் என்று தானும் தன்னுடைய மனைவியும் இணைந்து பூஜை செய்த படங்களை எல்லாம் காட்டி அவர் அளித்திருந்த பேட்டியை முன்பே நாம் ஆதாரமாக கொடுத்திருந்தோம். இதன் மூலம் ஒய்.வி.சுப்பா ரெட்டியும் அவரது மனைவியும் கிறிஸ்தவர்கள் என்று கூறுவது தவறானது என்பது உறுதியாகிறது.
ஒய்.வி.சுப்பாரெட்டியுடன் பூஜையில் ஈடுபட்ட அவரது மனைவியின் தோற்றமும் பைபிள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான பெண்மணியின் படமும் ஒன்றாக இருந்தது. எனவே, அவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவியாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் கையில் உள்ளது என்ன என்று தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த நிகழ்ச்சி கடந்த ஜூலை 8ம் தேதி நடந்தது தெரியவந்தது.
கடந்த 8ம் தேதி ஆந்திராவின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது கடப்பாவில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து அவரது மனைவி ஒய்.எஸ்.விஜயலட்சுமி, மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, மகள் ஷர்மிளா மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஒய்.எஸ்.விஜயலட்சுமி எழுதிய புத்தகத்தை ஒய்.எஸ்.ஜெகன் மோகன் வெளியிட்டார் எனத் தெரியவந்தது. படத்தைப் பார்க்கும்போது அது பைபிளா, புத்தகமா, டைரியா எனச் சரியாகத் தெரியவில்லை. எனவே. வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தோம்.
யூடியூபில் இது தொடர்பாக தேடியபோது வீடியோ கிடைத்தது. அதில் ஜெகன் மோகன் உள்ளிட்டவர்கள் நினைவிடத்துக்கு வருகின்றனர். அவரது தாயார் ஒய்.எஸ்.விஜயலட்சுமி கையில் பைபிள் இருக்கிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அந்த பைபிளை நன்கு குளோஸ் அப்பில் காட்டுகின்றனர். அனைவரும் அமர்கின்றனர். அருகில் ஒய்.வி.சுப்பா ரெட்டியும் உள்ளார். பிரார்த்தனை நடப்பது போல உள்ளது. ஆனால் ஒய்.எஸ்.விஜயலட்சுமி பைபிளை திறந்து படித்தது போல இல்லை.
அதன் பிறகு புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. வெளியிடப்பட உள்ள புத்தகம் கவரில் வைத்து கொண்டு வரப்படுகிறது. அதை வாங்குவதற்காக பின்னால் இருக்கும் அந்த பெண்மணியிடம் ஒய்.எஸ்.விஜயலட்சுமி பைபிளை கொடுக்கிறார். அதை அவர் வாங்கி வைத்திருந்தார்.
ஒய்.எஸ்.விஜயலட்சுமி கொடுத்ததை மட்டுமே அவரது மனைவி வாங்கி வைத்துள்ளார். முதல்வரின் தாயார் ஒரு புத்தகத்தை பிடிக்கும்படி கொடுக்கும்போது அது பகவத் கீதையா, பைபிளா, குரானா என்று எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது. ஒய்.எஸ்.விஜயலட்சுமி கொடுத்த பைபிளை சுமந்தார் என்பதற்காகவே அவர் கிறிஸ்தவர் ஆகிவிட்டார் என்று கூறுவது எல்லாம் ஏற்புடையதாக இல்லை. மேலும், மதம் என்பது தனிப்பட்ட உரிமை. பைபிளை தூக்கினார் என்பதாலேயே இந்து மதத்துக்கு விரோதமானவர் என்று கூறுவது ஏற்புடையதாக இருக்காது.
நம்முடைய ஆய்வில்,
ஒய்.வி.சுப்பாரெட்டி தான் இந்து என்று உறுதி செய்து, தான் பூஜையில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு அளித்த பேட்டி நமக்கு கிடைத்துள்ளது.
ஒய்.எஸ்.விஜயலட்சுமி கொடுத்த பைபிளை வாங்கி வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவி என்று கூறப்படுபவர் கையில் பைபில் இருப்பது உண்மைதான். ஆனால், அது ஒய்.எஸ்.விஜயலட்சுமியினுடையது என்பது உறுதியாகிறது. மேலும், ஒய்.வி.சுப்பாரெட்டி இந்து என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு சிறிது உண்மையுடன் நிறைய தவறான தகவல் சேர்த்து வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:திருப்பதி தேவஸ்தான தலைவரின் மனைவி பைபிள் வைத்திருந்தாரா? முழு விவரம் இதோ!
Fact Check By: Chendur PandianResult: Partly False
