போலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை!
‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் போலீசாருடன் தகராறு செய்யும் வீடியோ,’’ என்று கூறி பரவும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த வீடியோவில், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஒருவர், அதிகார தோரணையில் போலீசாரிடம் டோல்கேட் ஒன்றில் மல்லுக்கு நிற்பதைக் காண முடிகிறது. மேலும், போலீசாரை தாக்கிவிட்டுச் செல்கிறார். அவரை திமுக எம்எல்ஏ சந்திரசேகர் என்றே குறிப்பிட்டு, பலரும் இந்த வீடியோவை வைரலாக பகிர்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
முதலில், மேற்கண்ட வீடியோவில் இருப்பவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகரா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் நமது பதில்.
சினிமா நடிகராக இருந்து பின்னர் திமுக சார்பாக, 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சந்திரசேகர். இவர் தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமான முகம்தான். உதாரணமாக, அவரை பற்றிய செய்தி லிங்க் ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுபற்றி வாகை சந்திரசேகர் ஊடகத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், மற்ற ஊடகங்களில் இந்த வீடியோவில் இருப்பவர் முன்னாள் எம்பி அர்ஜூனன் என்று கூறி தகவல் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. இதன்படி, சேலம் அழகாபுரம் பகுதியில் வசிக்கும் இவர், திமுக சார்பாக, 1980-84 காலக்கட்டத்தில் தர்மபுரி தொகுதி எம்பியாக இருந்துள்ளார். பிறகு, திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்த அவர், சமீபத்தில் ஜெ.தீபா அணியில் இணைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது எந்த கட்சியில் உள்ளார் என்ற விவரம் தெரியவில்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் என்று கூறி பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
இந்த வீடியோவில் இருப்பவர் ஒரு முன்னாள் எம்பி; திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலுமே இருந்திருக்கிறார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.
Title:போலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை!
Fact Check By: Pankaj IyerResult: False