
‘’தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை; இந்தியில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன,’’ என குற்றம் சாட்டி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Admk Fails என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பேருந்து ஒன்றின் உள்ளே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அந்த புகைப்படத்தின் மேலே, ‘’தமிழுக்கு இடமில்லை, தமிழக மக்களின் வரி பணத்தில் தமிழக அரசால் புதியதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் இந்தியில் குறிப்புகள்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, வேறு ஏதேனும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்களா என விவரம் தேடினோம். அப்போது, இதேபோல, மேலும் பலர் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, அஇஅதிமுக, ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவற்றுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதேபோல, மற்றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே ஒருதலைபட்சமாக, இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் முதலில், திமுக எம்பி கனிமொழி எழுப்பியதாகும். அவர் ட்விட்டரில் மேற்கண்ட புகைப்படங்களை பகிர்ந்து இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, கண்டனம் தெரிவிக்கவே, இந்த தகவல் வைரலாக தொடங்கியுள்ளது.
ஆனால், உண்மை என்னவெனில், கனிமொழி இந்த பிரச்னையை ஜூலை 6, 2019 அன்றிரவு எழுப்பியுள்ளார். இதில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள், பெங்களூருவில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லக்கூடிய SETC ஏசி பேருந்து ஒன்றினுடையதாகும். இவை பெங்களூருவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதுதொடர்பான புகைப்படங்களை பார்க்கவும், செய்தியை படிக்கவும் இங்கே கிளிக் செய்யவும்.
ஜூலை 4, 2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, போக்குவரத்துத் துறை சார்பில், புதியதாக வடிவமைக்கப்பட்ட 500 பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார்.
இதில், ஒன்றுதான் மேற்கண்ட புகைப்படம் எனக் கூறப்படுகிறது.
எனினும், கனிமொழியின் ட்விட்டர் பதிவு பல தரப்பிலும் வைரலாகவே, அதுபற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
வெளிமாநிலத்தில் பேருந்து தயாரிக்கப்பட்டதால், ஓரிரு பேருந்துகளில் ஆங்கிலம், இந்தி கலந்து வழிகாட்டி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்றும், அவற்றை நீக்கிய பிறகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளோம் என்றும், போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது. இதுபற்றிய செய்தி ஊடகங்களில் காலதாமதமாக வெளியிடப்பட்டதால், உண்மை என்னவென்று பலருக்கும் தகவல் புரியாமல் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.

எனவே, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில், அவற்றை தமிழக போக்குவரத்துத் துறை உடனடியாக அகற்றிவிட்டதாக தெரியவருகிறது. வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்ட காரணத்தால், ஒரு பேருந்தில் மட்டும் இப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் முழுமையானதாக இல்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்ட தகவல் முழு உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழக அரசு பேருந்துகளில் இந்தி எழுத்துகள்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Mixture
