
சூரியனில் இருந்து ஆபாச சப்தம் வருகிறது என்று தினமலர் தலைப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஓம் என்ற எழுத்தை எழுத்துப்பிழையுடன் தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், சூரியனைப் பற்றி அமெரிக்காவின் நாசா ஆய்வு மேற்கொண்டதாகவும் சூரியனில் இருந்து வரும் ஒலியை ஆய்வு செய்தபோது அது ஓம் என்ற ஒலியுடன் ஒத்துப்போவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தலைப்பில் ஓம் என்ற வார்த்தைக்குப் பதில் தவறுதலாக ஆபாச வார்த்தையை வைத்துவிட்டது போல புகைப்படம் உள்ளது.
இந்த பதிவை, GO BACK MODI என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பற்றி நாசா ஆய்வு நடத்தி வியந்ததாக சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக தகவல் பரவி வருகின்றன. அவற்றில் உண்மை இல்லை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி செய்திகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சூரியனிலிருந்து ஓம் என்ற வருவதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. அதன் அடிப்படையில் தினமலர் செய்தி வெளியிட்டது போல் இருந்தது.
உண்மையில், தலைப்பில் தவறு செய்துவிட்டார்களா என்று ஆய்வு செய்தோம். தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை அதன் உரிமையாளர்கள் பிரித்துக்கொண்டனர். சேலம், ஈரோடு பதிப்புகளுக்கு தனி உரிமையாளர் உள்ளனர். இதில், சென்னை மற்றும் நெல்லை தினமலர் உரிமையாளர்கள் தனித்தனியே இணையதளம் வைத்துள்ளனர். ஈரோடு, சேலம் பதிப்புகளுக்கும் சென்னை, நெல்லை உள்ளிட்ட தினமலர் நாளிதழுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிந்தது. இது தொடர்பாக சேலம், ஈரோடு பதிப்பு வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளக் செய்யுங்கள். மேலும் அவர்களுக்கு இணையதள முகவரி இல்லை என்பதும் தெரிந்தது. இதனால், ஈ-பேப்பர் உள்ளிட்ட விவரங்களை பெற முடியவில்லை.
தினமலர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொள்வதற்கு முன்பு, அந்த படம் பற்றி உறுதி செய்துகொள்ள முடிவு செய்தோம். தினமலர் தவறாக தலைப்பிட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, சூரியனிலிருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது. நாசாவின் ஆராய்ச்சியில் ஆச்சரியம் என்று சரியாக தலைப்பிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
அதேநேரத்தில், யு டர்ன் என்ற இணையதளம் சூரியனிலிருந்து ஓம் என்ற சப்தம் வருவதாக தினமலர் வெளியிட்ட செய்தி சரியா என்று ஓர் கட்டுரையை வெளியிட்டது நமக்குக் கிடைத்தது. அதில் கூட, தினமலர் செய்தியில் மிகத் தெளிவாக ஓம் என்றே தெளிவாக இருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் புகைப்படத்தை fotoforensics.com ஆய்வு செய்தோம். அப்போது ஓம் என்ற வார்த்தையில் ‘ம்’ என்ற பகுதியில் சிறு மாறுதல் தெளிவாகத் தெரிந்தது. ‘ம்’ என்ற எழுத்தை நீக்கிவிட்டு ‘ல்’ என்ற எழுத்தை சேர்த்துள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தினமலர் ஆபாசமான வார்த்தையைப் பயன்படுத்தி செய்தி வெளியிட்டது தவறு என்று சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போட்டோ எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

தினமலர் செய்தியில் கூறியிருப்பது போல், சூரியனிலிருந்து ஓம் என்ற சப்தம் வருகிறது என்று நாசா கூறியதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, விண்வெளியில் கிடைத்த சப்தங்கள் என்று ஒரு கட்டுரை வெளியானது தெரிந்தது. அதில், எந்த இடத்திலும் ஓம் என்ற சப்தம் கேட்டதாக நாசா குறிப்பிடவில்லை. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
தொடர்ந்து தேடியபோது, சூரியன் ஓம் என்ற சப்தத்தை எழுப்புகிறது என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தொடர்பா உண்மை கண்டறியும் ஆய்வுகள் பல நடந்தது நமக்கு தெரிந்தது. அந்த செய்தியில், “சூரியனில் வெடிப்பு நிகழும்போது சப்தம் உருவாகிறது… விண்வெளியில் காற்று இல்லாததால் அந்த சப்தம் பூமியை வந்து அடைவது இல்லை… இதனால் சூரியனிலிருந்து எழும் சப்தத்தை நேரடியாக ஒலிப்பதிவு செய்ய முடியாது. இருப்பினும், சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் சூரியனில் ஏற்படும் வெடிப்பு, அலைவீச்சுக்களை படம் எடுக்கின்றன. அந்த படங்களை அடிப்படையாகக் கொண்டு, அதன் சப்தம் இப்படி இருக்கலாம் என்று உருவாக்கிய ஒலி அது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இப்படி படங்களை அடிப்படையாகக் கொண்டு நாசா செயற்கையாக உருவாக்கிய சித்தரிப்பு ஒலியை டெலிகிராஃப் என்ற ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்ட காணொளியைப் பகிர்ந்திருந்தனர். வீடியோவைப் பார்த்தோம்… ஓம் என்ற சப்தம் அதில் இல்லை. வெடிப்பது, வண்டு இரைச்சல் போடுவது போன்று பல சப்தங்கள் கேட்டன.
விண்வெளியில் காற்று இல்லாததால் சூரியனிலிருந்து வெளிப்படும் சப்தத்தை நம்மால் நேரடியாக கேட்க, ஒலிப்பதிவு செய்ய முடியாது. படங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒலியிலும் ஓம் என்ற சப்தம் கேட்கவில்லை. இதனால், இந்த தகவல் தவறானது என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இதன் அடிப்படையில், நாசா பெயரில் வெளியான தகவல் தவறானது என்பது தெரிந்தது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“சூரியனில் இருந்து ஆபாச ஒலி” – தினமலர் செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
