
‘’பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி ஏந்தியபடி போஸ் கொடுக்கும் இம்ரான் கான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
இந்திய இராணுவச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த பிப்ரவரி 28, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது போல உண்மையில் தலிபான் பயங்கரவாதிகளை இம்ரான் கான் நேரில் சந்தித்துப் பேசினாரா என ஆய்வு மேற்கொண்டோம். இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, கூகுளில் இது பழைய புகைப்படங்கள் என்பதற்கான செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.

இம்ரான் கான் பழங்குடியின மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும், அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவை என்றும் தெரியவருகிறது. இதுபற்றிய ஒரு வீடியோ தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இம்ரான் கான் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டவை அல்ல. இவை, 1990களில் எடுக்கப்பட்டதாகும். அப்போது, இம்ரான் கான், பாகிஸ்தானில் வடமேற்கு எல்லையில் வசிக்கும் பதான் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்திருக்கிறார். அவரது குடும்ப பின்னணி பதான் பழங்குடியினத்தவருடன் சேர்ந்ததாக உள்ளதால், கிரிக்கெட் வீரராக இருந்த காலத்திலேயே அவர் பதான் சமூக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அத்துடன், பதான் சமூகத்தினர் துப்பாக்கியுடன் உலவுவது சாதாரண விசயம்தான். அவர்கள் தலிபான்கள் அல்ல.
பதான் பழங்குடியின மக்களுடனான தனது அனுபவம் பற்றி இம்ரான் கான் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். 1993ம் ஆண்டு, Warrior Race: A Journey Through the land of the Tribal Pathans என்ற தலைப்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதும் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதுதவிர, பதான் இன மக்கள் தலிபான்களுடன் தொடர்புடையவர்களா என தேடிப் பார்த்தோம். அப்போது, அவர்களில் பெரும்பான்மையோர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் செல்வாக்குடன் திகழ்பவர்கள் என தெரியவந்தது. மேலும், அவர்களில் ஒரு சாரார் தலிபான் ஆதரவு மனப்பான்மையிலும், ஒரு சாரார் முற்போக்கு சிந்தனைகளுடன் இருப்பதை காண முடிந்தது. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த விவரம்,
1) இம்ரான்கான் புகைப்படம் உண்மைதான். ஆனால், அவர் கூட இருப்பவர்கள் தலிபான்கள் அல்ல. அவர்கள் பதான் பழங்குடியின மக்கள்.
2) இதுபற்றி இம்ரான் கானே விரிவாகப் புத்தகம் எழுதியுள்ளார். அந்த மக்கள் துப்பாக்கி வைத்திருப்பது பாதுகாப்பிற்காக…
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல இம்ரான் கான் பயங்கரவாதிகளை சந்திக்கவில்லை என உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்கன்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி ஏந்தியபடி போஸ் கொடுத்தாரா இம்ரான் கான்?
Fact Check By: Parthiban SResult: False
