
ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வாங்கிய கடன் அனைத்தையும் இந்தியா திருப்பி செலுத்திவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உலக வங்கியிடமிருந்தே கடன் பெறப்படும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெற்ற கடன் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தை அளித்து. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பிரதமர் மோடி புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “United Nationsல் வாங்கப்பட்ட அனைத்துக் கடனையும் முழுமையாக அடைத்தது இந்தியா! பொருளாதாரத்தில் நலிவடைந்து வரும் நாடு இத்தகையச் சாதனையை செய்ய முடியுமா?
யயோ இந்தியா பொருளாதாரத்தில் முடங்கிப் போச்சி! SBI பயமுறுத்துது, பொருளாதாரப் புலிகள் பயமுறுத்தறாங்க, வெளிநாடுகள் பயமுறுத்தராங்கன்னு செய்தியா வெளியிட்டு பீதிய கிளப்பறாங்க….
ஆனா இங்கே சத்தமே இல்லாம இந்தியா United Nationsல் உள்ள மொத்தக் கடனையும் பைசா பாக்கி இல்லாமல் அடைத்துள்ளது.
United Nationsல் உள்ள 193 நாடுகளில் 35 நாடுகள் தங்களது கடன் தொகை முழுமையாக கட்டிவிட்டார்கள் அதில் இந்தியாவும் ஒன்று என்கிறார் United Nations க்கான இந்தியாவின் தூதரான சயத் அக்பருதீன் கூறியுள்ளார்” என்று ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக நியூஸ் 18 ஆங்கிலத்தில் வெளியான செய்திக்கான இணைப்பையும் கொடுத்துள்ளனர்.
இந்த பதிவை Rudhra Murthy என்பவர் 2019 அக்டோபர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். உலக வங்கியிடம் இந்தியா வாங்கிய கடன் அனைத்தும் திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டிருப்பது மகிழ்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது. உலக நாடுகளுக்கான இந்தியத் தூதர் பெயரில் இந்த பதிவு வெளியாகி இருப்பதாலும் முன்னணி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருப்பதாலும் இது உண்மையாக இருக்கும் என்று எண்ணி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஐக்கிய நாடுகள் சபை நாடுகளுக்கு இடையே சமுதாய, பொருளாதார, பண்பாட்டு பிரச்னைகளைத் தீர்த்து வைத்தல் உலக நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ செயல்டும் அமைப்பாகும். இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு இதில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி செய்கின்றன. கடன் தொடர்பான விஷயங்களை உலக வங்கிதான் பார்த்துக்கொள்கிறது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், இந்தியா ஐக்கிய நாடுகள் சபையிடம் வாங்கிய அனைத்து கடனும் திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஐநா சபையிடமிருந்து கடன் பெற்றது என்று எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியானது இல்லை.
ஒருவேளை உலக வங்கி என்பதைத்தான் ஐக்கிய நாடுகள் சபை என்று தவறாக குறிப்பிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இந்தியப் பொருளாதாரமும் மந்தநிலையில் உள்ளது. அப்படி இருக்கும்போது உலக வங்கியில் வாங்கிய கடன் முழுவதையும் இந்தியா செலுத்திவிட்டது என்பது என்ற தகவல் மகிழ்ச்சியை அளித்தாலும் எப்படி அது சாத்தியமானது என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆதாரமாக அளித்திருந்த நியூஸ் 18 செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், ஐ.நா-வுக்கான இந்தியத் தூதர் சையத் அக்பருதீன் வெளியிட்ட ட்வீட்டை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “அனைத்தும் செலுத்தப்பட்டது. 193 நாடுகளில் 35 நாடுகள் மட்டுமே இன்றைய நாள் வரையில் அனைத்து நிலுவையையும் செலுத்தியுள்ளன” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இணைத்திருந்தார்.
News 18 | Archived Link |
அதில், சார்ட் 24, ஆல் அசஸ்மெண்ட், 2019 அக்டோபர் 11 வரையில் முழுவதுமாக செலுத்திய உறுப்பு நாடுகள் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதில் இந்தியா, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளின் பெயர் இருந்தது. 2018ம் ஆண்டு இந்த பட்டியலில் 43 நாடுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. எந்த இடத்திலும் உலக வங்கியிலிருந்து வாங்கி கடன் முழுவதும் திருப்பி செலுத்தப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
Archived Link |
நியூஸ் 18 செய்தியில், சில தினங்களுக்கு முன்பு உலக நாடுகள் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ், “கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், பல உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை சரிவர செலுத்தவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்தியத் தூதர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இது தொடர்பாக கூகுளில் தேடியபோது, “நிதி நெருக்கடி காரணமாக வார இறுதி நாட்களில் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூட ஐ.நா-விடம் நிதி இல்லை” என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் ஐ.நா சபையின் செயல்பாட்டுக்காக ஒவ்வொரு நாடுகளும் அளிக்கும் நிதி பற்றி குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.
Daily Thanthi | Archived Link 1 |
News 7 Tamil | Archived Link 2 |
ஐ.நா வெளியிட்ட அறிக்கையை தேடி எடுத்தோம். அதில் நிதி நெருக்கடி பற்றி ஐ.நா சபை மிக விரிவாக குறிப்பிட்டு இருந்தது. அதில் சார்ட் 24ல் ஐ.நா-வுக்கான நிதியை முழுமையாக செலுத்திய நாடுகள் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதில்தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெயர் இடம் பெற்று இருந்தது.

un.org | Archived Link |
உலக வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்துக்குச் சென்று இந்தியாவுக்கான கடன் மதிப்பு எவ்வளவு என்று தேடினோம். அப்போது, 624 திட்டங்களுக்காக மொத்தம் 115,203,566,441.39 டாலர் கடன் பெற்றிருப்பது தெரிந்தது. கடைசியாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி விவசாய திட்டத்திற்காக 16.5 கோடி டாலர் (தோராயமாக 1171 கோடி ரூபாய்) கடன் பெற்றிருப்பதும் தெரிந்தது. இதன் மூலம் உலக வங்கியிலிருந்து இந்தியா வாங்கிய கடன் முழுவதும் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று ஃபேஸ்புக்கில் வெளியானது தவறு என்று தெரிந்தது.

financesapp.worldbank.org | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
உறுப்பு நாடுகள் வழக்கமாக வழங்க வேண்டிய நிதியை செலுத்தாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் குற்றம்சாட்டியது நமக்கு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஐ.நா-வுக்கு செலுத்த வேண்டிய நிதி முழுவதையும் செலுத்திவிட்டதாக இந்தியத் தூதர் ட்வீட் செய்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பாக்கி வைத்துள்ள உறுப்பு நாடுகள் மற்றும் முழுவதும் செலுத்திய நாடுகள் பற்றிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது நமக்கு கிடைத்துள்ளது.
உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் அமைப்பு உலக வங்கிதான். உலக வங்கியிடம் இந்தியா தொடர்ந்து கடன் பெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கியில் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து இந்தியா வாங்கிய கடன் முழுவதும் திருப்பி செலுத்தப்பட்டது என்பது தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டுக்கு ஒவ்வொரு நாடும் வழங்க வேண்டிய தொகையை பாக்கியில்லாமல் இந்தியா செலுத்தியுள்ளது என்பதே உண்மை.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஐநா சபையிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியதா இந்தியா?
Fact Check By: Chendur PandianResult: False
