உயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்!

Coronavirus சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

மயிலாப்பூரின் ஃபேமஸான ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஜன்னல் வழியே பஜ்ஜி வியாபாரம் செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவல், “இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி..

இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் பாப்புலரானது. இந்த கடை பொன்னம்பல வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. கடையின் உரிமையாளரான ரமேஷ்,ஒற்றை ஜன்னலுக்குள் அமர்ந்து கொண்டு பஜ்ஜி ,வடைகளை விற்பனை செய்வார். இவரின் கடையில் தயாரிக்கப்படும் பஜ்ஜி, வடை, போண்டா, மிளகாய் பஜ்ஜி மிகுந்த சுவையாக இருக்கும். அதோடு, இங்கு பரிமாறப்படும் சாம்பார் மற்றும் சட்னி ரகங்களும் அருமையான சுவையுடன் இருக்கும். இதனால், எப்போதும் ஜன்னல் பஜ்ஜிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதும். மயிலாப்பூரின் அடையாளமாகவே ஜன்னல் பஜ்ஜி கடை கருதப்பட்டது. கடையை விரிபடுத்தும் வகையில் விற்பனை இருந்தும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியும் கடைசி வரை ஜன்னல் ஓரத்தில் இருந்தே பஜ்ஜியை ரமேஷ் விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் ரமேசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் மரணமடைந்து விட்டார். இதனால், மயிலாப்பூர் மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மயிலாப்பூருக்கு செல்பவர்கள் கபாலீசுவரர் கோயிலருகேயுள்ள ஜன்னல் பஜ்ஜி கடையில் ஒரு முறையாவாது சாப்பிடாமல் திரும்பியிருக்க மாட்டார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவுடனும் அன்புடன் நடக்கும் ரமேஷையும் எளிதில் மறந்து விட முடியாது. ரமேஷின் மறைவையடுத்து ஜன்னல் பஜ்ஜி கடை அடைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக ஜன்னல் பஜ்ஜி கடை இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்கள்..!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை, Asokan V என்பவர் 2020 ஜூலை 7ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் இரண்டு நாட்களாக மயிலாப்பூரின் ஃபேமஸ் ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் இறந்துவிட்டார் என்று பலரும் செய்தி வெளியிட்டு வந்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அருகே ஜன்னல் வழியே பஜ்ஜி விற்பனை செய்பவர், நெல்லை இருட்டுக்கடை அல்வா போல, மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடை ஃபேமஸ் என்று மிகப்பெரிய விளம்பரம் போல தகவல் பரப்பப்பட்டு வந்தது.

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலுக்கு பல முறை சென்றும் இந்த பஜ்ஜிக்கடையை மிஸ் செய்துவிட்டோமே என்று பலரும் ஏங்கும் அளவுக்கு இந்த பதிவுகள் இருந்தன. இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். 

dinakaran.comArchived Link 1
polimernews.comArchived Link 2
tamil.indianexpress.comArchived Link 3

இது தொடர்பாக வேறு ஏதும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடியபோது, தினகரன் உள்ளிட்ட பல முன்னணி ஊடகங்களும் பஜ்ஜிக்கடை உரிமையாளர் மறைந்துவிட்டார் என்ற வகையில் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. பாலிமர் டி.வி வெளியிட்டிருந்த செய்தியில் பஜ்ஜிக்கடை உரிமையாளர் மரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். உள்ளே, பஜ்ஜிக்கடையை நடத்தி வந்த உரிமையாளர் கொரோனாவுக்கு மரணம் என்ற வகையிலேயே செய்தி இருந்தது. கடைசி பத்தியில், “ஆடிட்டராக பணிபுரிந்து கொண்டே தன் சகோதரர் சந்திரசேகருக்கு பஜ்ஜி கடையில் உதவியாகவும் இருந்தார். அவரின் மறைவை எப்படி ஈடுகட்டப் போகிறோம் என்று தெரியவில்லை” என்று குடும்பத்தினர் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் பஜ்ஜி கடை நடத்தி வந்தவருக்கு உதவியாக இருந்தவர் மரணத்தை, பஜ்ஜிக்கடை உரிமையாளர் மரணம் என்று மாற்றி பலரும் பகிர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. அப்போது தினமலர் வெளியிட்ட செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

dinamalar.comArchived Link

அதில், “நான் உசுரோட இருக்கிறேன்பா! ‘ஜன்னல்’ கடைக்காரர் பேச்சு” என்று இருந்தது. செய்தியை படித்துப் பார்த்தபோது, மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் கடை உள்ளது என்றும், அதன் உரிமையாளர் சந்திரசேகரிடம் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அவர், “என்னுடைய சகோதரர் சிவராமகிருஷ்ணன் டிஎம்எஸ் மத்திய கணக்காயர் அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். அவர் காலை மற்றும் மாலை நேரத்தில் தனக்கு உதவி செய்வார்.  அவருக்கு நிமோனியா, சிறுநீரக குறைபாடு இருந்த நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூலை 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாஸிடிவ் என்று வந்தது. எனவே, அதிகாரிகள் அவரது உடல் அடக்கத்தை மேற்கொண்டனர்.

நான் கொரோனா தொற்று காரணமாக பலியானதாக செய்தி வெளியானது என்று கேள்விபட்டேன். நான் நலமாக உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த என் சகோதரின் மரணம் எங்கள் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு, ஒரு மாதத்துக்குப் பிறகு கடை திறக்கப்படும்” என்று கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தனர்.

ஜன்னல் பஜ்ஜிக்கடை என்று டைப் செய்து தேடியபோது அது தொடர்பான பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. கடை உரிமையாளர் என்று கே.சந்திரசேகரன் பேசும் வீடியோக்கள் பல நமக்கு கிடைத்தன. ஆனால், ஐஇ தமிழ் உள்ளிட்ட பல ஊடகங்கள் சந்திரசேகரன் படத்தை வைத்து சிவராமகிருஷ்ணன் இறந்த செய்தியை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

பஜ்ஜிக் கடை நடத்தி வந்த சந்திரசேகரின் சகோதரரும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவருமான சிவராமகிருஷ்ணன் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் அவ்வப்போது தன்னுடைய சகோதரருக்கு உதவி செய்ய கடைக்கு வருவது வழக்கம்.

அதன் அடிப்படையில் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பலரும் ஜன்னல் பஜ்ஜி கடையின் உரிமையாளர் சந்திரசேகர் படத்தை வைத்து அவர் இறந்துவிட்டார் என்ற வகையில் பதிவிட்டு வருவதையும் காண முடிகிறது. இதன் அடிப்படையில். இந்த பதிவு உண்மையும் தவறும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False