காஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம்! – அவதூறான ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

காஷ்மீரில் சிறுவர் சிறுமியரை இந்திய ராணுவம் அநியாயமான முறையில் கொலை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Kashmir 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

Fathima Safiyyah என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் 2019 செப்டம்பர் 3ம் தேதி 58 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பல நிகழ்வுகளின் தொகுப்பாக அந்த வீடியோ இருந்தது. வீடியோவின் நடுவே அரபி எழுத்துக்கள் வருகின்றன. அல்ஜஸீரா லோகோ சில வீடியோக்களில் வருகிறது.

நிலைத் தகவலில், “காஷ்மீரில் இந்திய ராணுவ குண்டர்களால் அநியாயமான முறையில் கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுவர் சிறுமியர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதனால், அங்கு வன்முறை ஏற்படுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் ஏதும் இல்லை. தொலைத் தொடர்பு சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் இன்றி பள்ளிகள் வெறிச்சோடி காணப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பான செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாட்டின் பிற பகுதி ஊடகங்கள் கூட காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று கண்டறிந்து செய்தி வெளியிட முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் நடந்தாக இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.வீடியோவில் உள்ளவர்கள் காஷ்மீரிகளைப் போல இல்லை. அரபு, சிரியா பகுதிகளைச் சார்ந்தவர்கள் போல இருந்தனர். இதனுடன், அரபி எழுத்துக்கள், அல்ஜஸீரா லோகோ உள்ளிட்டவை இந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Kashmir 3.png

மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவின் காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ பற்றிய உண்மை தெரிந்தது.

Kashmir 4.png

வீடியோவின் முதல் பகுதியாக வந்த சிறுவன் அழும் காட்சி சிரியாவில் எடுக்கப்பட்டது என்று ஒரு யூடியூப் லிங்க் கிடைத்தது. ஆனால், அந்த யூடியூப் வீடியோ அகற்றப்பட்டு இருந்தது. 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தனர். தொடர்ந்து தேடியபோது 2016 ஜூன் 13ம் தேதி அதே வீடியோ வேறு ஒருவரால் பதிவேற்றம் செய்யப்பட்டது நமக்கு கிடைத்தது. இதன் மூலம் சமீபத்தில் காஷ்மீரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

Archived Link

வீடியோவின் இரண்டாவது நிகழ்வாக, அடிபட்ட சிறுவன் ஒருவனை மருத்துவமனைக்கு கொண்டுவரும் காட்சி வருகிறது. அந்த காட்சியை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி யூடியூபில் இந்த காட்சி கொண்ட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. அதில், சவுதி அரேபியாவில் சிறுவர்கள் மீது தாக்குதல் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Archived Link

அடுத்ததாக சிறுவன் ஒருவன் கதறி அழும் காட்சி வருகிறது. அந்த பகுதியை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஒரு பாடல் ஒன்றில் அந்த சிறுவன் அழும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. சிரியாவில் நடைபெறும் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த பாடல் உருவாக்கப்பட்டது போல இருந்தது. 2016ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி அந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அந்த சிறுவன் அழுவது உண்மையா அல்லது பாடலுக்காக அந்த காட்சி படமாக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், காஷ்மீரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Archived Link

பழைய வீடியோ மற்றும் சிரியா போன்ற உலகின் வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை எல்லாம் கொண்டுவந்து காஷ்மீரில் நடந்தது என்று சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். இதனால், காஷ்மீரிகள் பற்றிய உண்மையான நிலை வெளியே தெரியாமலே போய்விட வாய்ப்புள்ளது. மேலும், காஷ்மீர் பற்றி பேசினாலே தேச விரோதிகள் என்று கூறுபவர்களுக்கு இதுபோன்ற பொய்யான தகவல் சாதகமாக அமைந்திட வாய்ப்புள்ளது. 

நம்முடைய ஆய்வில், மேற்கண்ட வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், காஷ்மீரில் சிறுவர் சிறுமியர் மீது இந்திய ராணுவம் தாக்குதல் என்ற தகவல் பொய்யானது, ராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அவதூறான செயல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம்! – அவதூறான ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1 thought on “காஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம்! – அவதூறான ஃபேஸ்புக் பதிவு

Comments are closed.