சபரிமலை 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

சமூக ஊடகம் சமூகம்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Sabari 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். பார்க்க சபரிமலை போலத் தெரிகிறது. ஆனால், கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. பாிசலில் ஒருவர் செல்கிறார். அவர் கன்னடத்தில் பேசுகிறார்.

இந்த வீடியோவை இந்து மதத்தை பற்றி அறிவோம். என்ற ஃபேஸ்புக் பக்கம் Anbu Yogi என்பவர் 2019 ஆகஸ்ட் 23ம் தேதி இதைப் பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:

சபரிமலை 18ம் படி வரை தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு சபரிமலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று மட்டுமே செய்திகள் கிடைத்தன.  கடந்த ஆண்டு பம்பைநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவில் தற்காலிகமாக நடைமூடப்பட்டது என்றும் 2018ம் ஆண்டு செய்திகள் கிடைத்தன.

Sabari 3.png

இந்த வீடியோவில் கோவிலின் முகப்புப் பகுதியில் கன்னடத்தில் எழுதப்பட்டு இருந்தது. பரிசலில் சென்றவர் கன்னடத்தில் பேசுகிறார். எனவே, கர்நாடகத்தில் உள்ள ஐயப்பன் கோவிலாக இருக்கலாம் என்று கருதினோம். கர்நாடகாவில் உள்ள ஐயப்பன் கோவில் ஏதும் தண்ணீரில் மூழ்கியதாக செய்தி வெளியானதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் தேடியபோது, சபரிமலை ஐயப்பன் கோவில் 18ம் படி வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது என்று இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது.

Sabari 4.png

வீடியோவில் என்ன பேசுகிறார் என்று கன்னடம் தெரிந்தவர்களிடம் கேட்டோம். “கோவிலின் நான்கு படிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. கிட்டத்தட்ட 6 முதல் 7 அடிக்கு தண்ணீர் இங்கே உள்ளது. இன்னும் கொஞ்சம் மழை பெய்தால் ஐயப்பன் கோவில் படிக்கட்டு முழுவதும் மூழ்கிவிடும். அருகில் உள்ள தத்தாத்ரேயர் சன்னதியும் மூழ்கிவிட்டது” என்று கூறியதாக குறிப்பிட்டனர். இந்த கோவில் எங்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாரா என்று கேட்டபோது. இடம் எதையும் குறிப்பிடவில்லை என்றனர்.

வீடியோவில் இந்த கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில் என்று கூறவில்லை, கோவிலின் முகப்பில் மலையாளத்துக்கு பதில் கன்னடத்தில் ஐயப்பன் கோவில் என்று எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இது சபரி மலை ஐயப்பன் கோவில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தின. ஆனால் இது எந்த ஊரில் உள்ள கோவில் என்று கண்டறிய முடியவில்லை.

கமெண்ட் பகுதியில் யாராவது இந்த கோவில் பற்றித் தெரிவித்துள்ளார்களா என்று தேடினோம். பலரும் இது தவறான தகவல், இது சபரிமலை ஐயப்பன் கோவில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

Sabari 5.png

நிச்சயம் இது சபரி மலையில் உள்ள ஐயப்பன் கோவில் இல்லை என்பதை உறுதி செய்ய, இரண்டு கோவில்களின் முகப்பு பகுதியை ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தோம். கூகுளில் சபரிமலை ஐயப்பன் கோவில் புகைப்படத்தை எடுத்து, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள ஐயப்பன் கோவிலின் முகப்புப் பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்போது, இது சபரிமலை ஐயப்பன் கோவில் இல்லை என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது.

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐயப்பன் கோவில் ஒன்றின் வீடியோவை சபரி மலை ஐயப்பன் கோவில் என்று தவறான தகவலுடன் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சபரிமலை 18ம் படிக்குக் கீழ் வெள்ளப்பெருக்கு: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •