
மார்ல்பரோ (Marlboro) என்ற பிரபல சிகரெட்டை இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாகவும், ஆனால் இஸ்ரேலில் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மார்ல்போரோ சிகரெட் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உலகில் மிகச்சிறந்த சிகரெட் “Marlboro” உற்பத்தி செய்யும் நாடு இஸ்ரேல், ஆனால் உலகில் சிகரெட் முழுமையாய் தடை செய்த நாடும் இஸ்ரேல் தான்.
சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNAவையும் பாதிக்கும். இதன் காரணமாக அடுத்த தலை முறை அறிவற்றவர்களாகவும், மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும்.
அதே நேரத்தில் 90 % சிகரெட் முஸ்லிம் நாடுகளில் குடிக்கிறார்கள். சிகரெட் குடிக்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வீரியம் இல்லாத, புத்தி கூர்மை இல்லாத குழந்தைகளாகவே பிறக்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Ashraf Shaikh Ali என்பவர் 2015 ஜூன் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சிகரெட் புகைத்தல் உடல்நலத்துக்கு கேடு. அது எந்த பிராண்ட் சிகரெட்டாக இருந்தாலும் சரி புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை அது ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம். எனவே, சிகரெட் புகைப்பதால் வரக்கூடிய பாதிப்புக்கள் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கவில்லை. இதில், உலகின் முன்னணி பிராண்ட் சிகரெட்டை தயாரிக்கும் நாடு இஸ்ரேல் என்றும் ஆனால், சிகரெட் விற்பனையை இஸ்ரேல் தடை செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
மார்ல்போரோ சிகரெட் தயாரிக்கப்படும் இடம் குறித்து கூகுளில் தேடினோம். அப்போது, இந்த சிகரெட் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் தகவல் நமக்கு கிடைத்தது. இந்த பிராண்ட் சிகரெட்டை அமெரிக்காவில் பிலிப் மோரிஸ் யுஎஸ்ஏ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தை நடத்துபவர்களின் பின்னணி இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடையதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது, பிலிப் மோரிஸ் என்பவர் ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர் என்பதும் இவர் இங்கிலாந்துக்கு வந்து லண்டனில் சிகரெட் கடை நடத்தியதும் தெரிந்தது. 1854ம் ஆண்டு இவர் பிலிப் மோரிஸ் இங்கிலீஷ் ஓவல் என்ற ஃபில்டர் இல்லாத சிகரெட்டை அறிமுகம் செய்தாராம். 1902ம் ஆண்டு அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்துள்ளது பிலிப் மோரிஸ் நிறுவனம். அதன் பிறகு, 1924ம் ஆண்டுதான் மார்ல்போரோ பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
இஸ்ரேலில் மார்ல்போரோ பிராண்ட் சிகரெட் தயாரிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, பிலிப் மோரிஸ் லிமிடெட் என்கிற நிறுவனம் 1957ம் ஆண்டு முதல் அமெரிக்காவிலிருந்து மார்ல்போரோ சிகரெட்டை இறக்குமதி செய்து இஸ்ரேலில் விற்பனை செய்து வருவது தெரிந்தது. இஸ்ரேல் தலைநகரான டெல் அவிலில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 280 பேர் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விற்பனைப் பிரிவில்தான் உள்ளனர் என்று அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உற்பத்திக் கூடம் இருப்பதாக அந்த இணையதளம் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலில் சிகரெட் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இஸ்ரேல் நாட்டின் சுகாதாரத் துறை அந்நாட்டில் புகைபிடிப்போர் பற்றி வெளியிட்ட புள்ளிவிவரம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், ஐரோப்பியாவைக் காட்டிலும் இஸ்ரேலில் புகைப்பிடிப்பவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னொரு தகவலில், இஸ்ரேலில் பொது இடங்களில் சிகரெட் புகைக்க தடை சட்டம் 2007ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது என்று இருந்தது. உலகத்திலேயே புகையிலைப் பொருட்களை பயன்படுத்த, விற்க தடை உள்ள ஒரே நாடு பூட்டான்தான் என்றும் நமக்கு தகவல் கிடைத்தது. மற்ற நாடுகளில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க மட்டுமே தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம், இஸ்ரேலில் சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
அடுத்ததாக உலகில் 90 சதவிகிதம் புகைப்பிடிப்பாளர்கள் இஸ்லாமிய நாடுகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத, வளர்ந்துவரும் நாடுகளில்தான் அதிக அளவில் சிகரெட் பயன்பாடு உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

உலக அளவில் அதிக அளவில் சிகரெட் உற்பத்தி செய்யும் பயன்படுத்தும் நாடாக சீனா உள்ளது. சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்கள் நாடுகள் வரிசையில் கிரிபாட்டி, மான்டிநெக்ரோ, கிரீஸ், கிழக்கு தைமூர், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.பி.சி வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இதன் மூலம், 90 சதவிகித சிகரெட் இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களால் பிடிக்கப்படுகிறது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
நம்முடைய ஆய்வில்,
1) மார்ல்போரோ சிகரெட் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
2) மார்ல்போரோ சிகரெட் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்படவில்லை, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
3) இஸ்ரேலில் புகைபிடிக்கும் வழக்கம் உள்ளது. தடை செய்யப்படவில்லை என்ற விவரம் கிடைத்துள்ளது.
4) உலக அளவில் அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் நாடுகள் பட்டியல் கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மார்ல்போரோ சிகரெட்டை இஸ்ரேல் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:Marlboro சிகரெட்டை உற்பத்தி செய்யும் இஸ்ரேல்! – பகீர் ஃபேஸ்புக் தகவல்
Fact Check By: Chendur PandianResult: False
