
‘’கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி மக்கள் பணத்தை சாலையில் வீசி சென்றனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இதில், சாலையில் பணம் சிதறிக் கிடக்கும் புகைப்படங்களை இணைத்து, அதன் மேலே, ஆங்கிலத்தில், ‘’சாவில் இருந்து தங்களை காப்பாற்ற முடியாத பணத்தை இத்தாலி மக்கள் சாலையில் வீசிச் செல்கின்றனர்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் பற்றி மேலும் தகவல் தேடியபோது, இதுபற்றி நியூஸ் ஜே செய்தித்தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஒன்றை கண்டோம். அந்த வீடியோவில் இந்த புகைப்படங்கள் வெனிசுலா நாட்டில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்றும், இதற்கும் கொரோனா வைரஸ் பாதித்த இத்தாலிக்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள், இத்தாலியில் எடுக்கப்பட்டவை அல்ல. இவை வெனிசுலா நாட்டில் எடுக்கப்பட்டதாகும். இவற்றில் சில புகைப்படங்கள், வெனிசுலாவில் நிகழ்ந்த ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவை ஆகும். மற்ற புகைப்படங்கள், வெனிசுலா அரசு வெளியிட்ட கரன்சி செல்லாது அறிவிப்பின்போது எடுக்கப்பட்டவை ஆகும்.
வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட பணவீக்க பிரச்னையை சமாளிக்கும் வகையில், அந்நாட்டு அரசு கடந்த 2018ம் ஆண்டு பழைய கரன்சிகளை செல்லாது என அறிவித்தது. குறிப்பாக, குறைந்த மதிப்புடைய கரன்சிகளால் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதனால், ஏராளமான மக்கள் தங்களிடம் இருந்த குறைவான மதிப்புடைய பணத்தை சாலைகளில் அப்படியே வீசி சென்றனர். இதுதான் மேற்கண்ட புகைப்படங்களின் பின்னணியில் உள்ள உண்மை.
இதுபற்றி வெனிசுலா ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Maduradas.com Link | Archived Link |
இதேபோல, மற்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
CNN News Link | Archived Link |
இதுபற்றி கடந்த ஆண்டில் நாமும் ஒருமுறை வேறொரு கிளெய்ம் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிவுகளை சமர்ப்பித்துள்ளோம். அதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, 2018ம் ஆண்டில் வெனிசுலா நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்து, தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்புடன் தொடர்புபடுத்தி பகிர்ந்து, சமூக ஊடக பயனாளர்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முனைந்துள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்கள் பற்றிய தகவல் தவறு என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸ்: இத்தாலி மக்கள் பணத்தை சாலையில் வீசி சென்றார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
